நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூகையில்... நேற்று மாலை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுபோல் அரசாங்க அங்கத்தவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றைய அந்த பேச்சுவார்த்தையிலே மூன்று முக்கிய விடயங்களை அரச அங்கத்தவர்கள் ஏற்க மறுப்புத் தெரிவித்தனர். வடக்கு - கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே தங்களது எதிர்ப்பை அரசதரப்பினர் தெரிவித்தனர். அந்த முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை நாங்கள் அவர்களுக்கு வழங்கினோம். ஏற்கனவே பல இடங்களில் இந்த மூன்று விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதையும் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் இவ்விடயம் தொடர்பில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அரச தரப்பினர் வந்தனர். இதனடிப்படையில் இனிவருகின்ற பேச்சுக்கள் தொடரவிருக்கின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுபோல் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பேச்சுக்களில் வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய மிகமுக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து பேசவுள்ளோம் என்று கூறினார். நேற்றைய பேச்சு வார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன், சுமந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கணகஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அரச தரப்பிலே பேராசிரியர் ரஜீவ, பேராசிரியர் பீரிஸ் மற்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’