இ னப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணம் மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான ஐப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள யசூசி அகாஷிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அகாஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகளை போதியளவு ஏற்படுத்தி கொடுத்தல் தொடர்பில் தாம் கரிசனை செலுத்துவதாகவும் அகாஷி தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் உடன்படக்கூடிய பல சந்தர்ப்பங்களையும், அரிய வாய்ப்புகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தவறவிட்டதாக அகாஷி இதன்போது தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிட கூடாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கது. இந்த தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். நாட்டின் இனப்பிரச்சினைக்கோ மற்றும் வேறெந்த பிரச்சினைகளுக்கோ நாட்டுக்கு வெளியே உள்ள சர்வதேச சமூகமும், புலம்பெயர்ந்த மக்களும் தீர்வு காண முற்படுவது நடைமுறை சாத்தியமற்றது எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹொபோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’