தீபாவளி வெளியீடான சூர்யாவின் '7 ஆம் அறிவு' திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கூறப்பட்ட வசனங்கள் இலங்கையில் நீக்கப்பட்டமைக்கு எதிராக, இனிவரும் காலங்களில் இலங்கையில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வசனங்கள் நீக்கப்பட்ட நிலையிலேயே இத்திரைப்படம் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால்இ இந்தியாவின் தமிழ்த் திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இனிவரும் காலங்களில் இலங்கையில் எனது திரைப்படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார். '7ஆம் அறிவு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் அனைவரும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை, ”7ஆம் அறிவு” திரைப்படத்தின் வெற்றி குறித்து ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியுள்ள நடிகர் சூர்யா, இலங்கை தொடர்பிலும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ” இலங்கையில் ”7ஆம் அறிவு திரைப்படத்தின் முக்கியமான வசனங்களை நீக்கியுள்ளார்கள். ஆனால் நாம் ஒரு விடயத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாம் இந்த திரைப்படத்தின் மூலம் சண்டை போடவில்லை. இந்த வசனங்களை நீக்கினாலும் நாங்கள் சொல்ல நினைத்தவை மக்களைச் சென்று சேர்ந்துவிட்டன.” என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’