வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 அக்டோபர், 2011

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தமிழ் கட்சிகள் சந்திப்பு


லங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும் தமிழ் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை பகல் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
சுமார் 45நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்திய அதிகாரிகளும், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஒவ்வொரு சிவில் நிர்வாக அலுவல்களிலும் இராணுவத் தலையீடு இருப்பதாக தமிழ் கட்சிகளால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் திருகோணமலை, சம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தினால் குடிபெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் பற்றியும், பொதுவாக பெரியளவிலான அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படும் போது அதனால் இடம்பெயரும் மக்களுக்கான மீள்குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வாதாரம் என்பவை அத்திட்டத்தில் அடங்கும் வகையில் அமையப்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தில் அப்படியான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் வடக்கில் பிரத்தியேகமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, அங்கு இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதையும், காணிகள் மீள்பதிவு நடவடிக்கையால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டங்கள், காணிகளை இழக்கக்கூடிய நிலைமைகள் தொடர்பிலும் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. இவைகளை உன்னிப்பாக செவிமடுத்த இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய், இவை சம்பந்தமாக சரியான முடிவினை எடுப்பதற்காக தாம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’