தா ய்லாந்து நாட்டில் பெய்து வரும் தொடர் மழையில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பேங்கொக் நகரில் 5 அடி உயரத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் கடந்த ஒரு 20 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாங்காக் நகரம் வழியாக செல்லும் சோ பரையா என்ற ஆறு உடைந்து நகருக்குள் புகுந்துள்ளது. இதனால் பாங்காக் நகர் முழுவதும் 5 அடிக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாங்காக்கின் விமான நிலையமான டான்மவுங் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுவிட்டன. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ளம் பாங்காக் நகரில் ஏற்பட்டது இல்லை. இந்த வெள்ளத்தில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 9.7 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். சுமார் 10,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் இங்லக் ஷினாவாத்ரா கூறியதாவது, வெள்ளத்தை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பாங்காக் நகரை மிக அதிக அளவிலான வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அதை கட்டுபடுத்த முடியவில்லை. நகரில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிடுங்கள் என எச்சரித்துள்ளார். வெள்ள நீர் காட்டு பகுதிகளிலும் புகுந்ததால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான பாம்புகள் பாங்காக் நகருக்குள் அடித்து வரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெள்ளத்தில் செல்லவும் பயப்படுகின்றனர். தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தாய்லாந்தில் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பெய்துள்ள மழைப் பொழிவை விட, இந்தாண்டு 25 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’