பொலிஸாரின் அழைப்பின்றி இராணுவப் பிரசன்னத்துக்கு இடமே இல்லையெனத் தெரிவித்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு உதவியாக செயற்படுவதற்கே விசேட வர்த்தமானியூடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முப்படையினருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் கீழான கட்டளை அங்கீகாரத்துக்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை விடுத்திருந்தார். பொலிஸாருக்கு உதவியாக சகல ஆயுதப் படையினரையும் இதன் மூலம் ஜனாதிபதி சேவைக்கு அழைத்திருந்தார். இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இவ்விவகாரம் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடினேன். இதன் போது பொலிஸார் உதவி கோரினால் மாத்திரமே படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவ்வாறில்லாத பட்சத்தில் படையினர் முகாம்களை விட்டு வெளியேறுவதில்லை என்றும் அவர் எனக்குத் தெரிவித்தார்.
இயல்பு நிலைமை மற்றும் விசேட நிலைமைகள் தொடர்பில் நாம் அறிந்திருக்கின்றோம். பொலிஸாரால் சில நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாது போகுமிடத்து பொலிஸாரால் உதவி கோரினால் மட்டுமே படையினர் வருவர்.
படையினர் அழைக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் பற்றி பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கின்றது. சட்டம் அமைதியை நிலை நாட்டும் போதும் கூட படையினரால் கைது செய்யப்படுவோர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதே போல் படையினரால் கைது செய்யப்படுவோரை தடுத்துவைக்கவும் முடியாது.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சில சட்டங்களை அமுல்படுத்த வேண்டி வரும். எல்லையின்றி செயற்படும் போது சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தான் வேண்டும் என்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’