தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு கட்டம் கட்டமாக இடம்பெறுமென்றும் எடுக்கப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே அங்கீகரிக்கப்படுமெனவும் வெளிவந்த செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு தொடர்பில் வெளிவந்த வெவ்வேறுபட்ட செய்திகள் தொடர்பில் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்படி குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் தமிழ்மிரருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்...
அரசுக்கும் எங்களுக்குமிடையிலான பேச்சு தொடர்பில் நாங்கள் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தோம். அவ்வறிக்கையில் கட்டம் கட்டமான பேச்சு என்பது பற்றி ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படியிருக்கையில் கட்டம் கட்டமான பேச்சு என்பது பற்றி செய்திகள் வெளிவந்திருப்பது அவர்களின் கற்பனையாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சில் அப்படியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்க்கமானதொரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் பேச்சில் ஈடுபடுகின்றோம். இது எங்களுக்கும் அரசுக்குமிடையில் தீர்க்கமான முடிவுகளை தரக்கூடிய பேச்சு. இவ்விடயத்தினை சிலர் திரிவுபடுத்திப் பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கும் எங்களுக்குமிடையில் பேச்சு நடைபெறுமா இல்லையா என்பது பற்றி நாம் இப்பொழுது எதுவும் கூறமுடியாது. ஆனால், அரசாங்கத்துடனான பேச்சுக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். அரசுடனான பேச்சின்மூலம் சுமுகமான அரசியல் தீர்வினையே நாங்கள் எதிர்பாக்கிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’