வவுனியாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மத போதகர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் புறநகர்ப்பகுதிகளான அரபா நகர், செக்கடிப்புளவு, மற்றும் சாம்பல் தோட்டம் ஆகிய கிராமங்களிலேயே ஒரே நாளில் மர்மனிதர்களின் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. செக்கடிப்புளவில் இரவு வேளையில் வீட்டு வளவுக்குள் சென்றவர்கள் பொலிஸார் போன்று நடித்து கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் மறுபகுதியில் கணவனும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தமையினால் இரண்டு மாத கர்ப்பிணிப்பெண் வீட்டுக் கதவைத் திறந்துள்ளார். இவ்வேளையில் திடீரென அவரது தலையில் தடிகள், மற்றும் இரும்புக் கம்பியினால் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர். இதன் காரணமாக அச்சமடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி மதபோதகரின் வீட்டுப்பக்கமாக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை துரத்திச் சென்ற மர்ம மனிதர்கள் அப்பெண்ணை தாக்கியுள்ளனர். இதனால் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்களினால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகிலுள்ள அரபா நகரில் ஜெயம் என்பவரது வீட்டுக்குச் சென்ற மர்ம மனிதர்கள் அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; மர்ம மனிதர்களின் பயத்தினால் எனது மனைவி பிள்ளைகள் அயலிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தனர்.
நான் எனது வீட்டில் தனிமையில் இருந்த சமயம் வீட்டுக் கதவைப் பூட்டுவதற்கு முனைந்த போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் கூரிய ஆயுதத்தினால் என்னைத் தாக்கினர். முகத்தினை மறைத்திருந்த இவர்கள் முதலில் சிங்களத்திலும், பின்னர் தமிழிலும் பேசினார்கள். என்னை தாக்கிய மர்ம மனிதர்கள் உணவுக்காக வைத்திருந்த மீன் கறியை எனது முகத்தில் ஊற்றிவிட்டு வீட்டினை பூட்டிவிட்டு சென்றனர். இதனை அடுத்து நான் அவலக்குரல் எழுப்பிய போதிலும் அச்சம் காரணமாக எவரும் வரவில்லை என்று தெரிவித்தார்.
இதேபோல் சாம்பல் தோட்டத்தில் வசிக்கும் யேசு நல்லவர் தேவசபையின் மத போதகரையும் அவரது மனைவியையும் மர்ம மனிதர்கள் தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக இருவரும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மற்றும் ஒரு நபரும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் தாண்டிக்குளத்தில் இளம் பெண் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். திருநாவற்குளம் பகுதியில் வீடொன்றின் கதவை இனந்தெரியாதோர் உடைக்க முற்பட்ட போது வீட்டார் அபயக்குரல் எழுப்பியதனால் மர்ம மனிதர்கள் தப்பி ஓடினர். இவ்வாறு வவுனியாவில் கடந்த சில தினங்களாக மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’