அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவிப்புக்கிணங்க நேற்று நள்ளிரவுடன் அவசரகால விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் அச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஏனைய ஒழுங்கு விதிகளும் நீக்கப்பட வேண்டும். இதனால், அச்சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. அமைப்பை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக கருத முடியாது. அதேபோல் உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட வேண்டும்.
ஆனால், உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருக்கவும் எல்.ரி.ரி.ஈ. மீதான தடையை நீடிக்கவும்; பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
இதனால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட போதிலும் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் எவரும் விடுதலை செய்யப்பட முடியாது என அவர் கூறினார்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான இவ்விதிகள் ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும் அவசரகால விளைவு விதிகள் எனும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்படும்வரை இவ்விதிகள் நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’