வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

விடுவிக்க உத்தரவு; நிபந்தனைக்கு ஹஸாரே மறுப்பு

திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அன்னா ஹாஸாரேயை விடுவிக்க இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், தமது போராட்டத்திற்கு அரசு விதித்துள்ள நிபந்தனைகளை விலக்கிக்கொள்ளும் வரை சிறையிலிருந்து வெளியேறப் போவதில்லையென்று கூறியுள்ளார்.
 இந்தியாவில், ஊழலை ஒழிப்பதற்கு வழி செய்யும் வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவரக் கோரி, செவ்வாயன்று டெல்லியில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சமூக சேவகர் அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் முன்னர் தடுத்து வைக்கப்பட்டார்கள். உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த அன்னா ஹஸாரேவை, அவரது வீட்டில் சுமார் ஏழரை மணியளவில் போலீசார் சந்தித்தனர். போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய போதிலும் அதை மீறி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அன்னா கூறியதால் அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். காவல் அதிகாரிகளின் மெஸ்ஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹஸாரே, பின்னர் திகார் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல், அவருக்கு துணையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி உள்ளிட்டோரும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். போலீஸ் காவலில் உள்ள போதிலும், அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், விளையாட்டரங்கம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், மும்பை, சென்னை, கொல்கத்தா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஆதரவாக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிபந்தனையை ஏற்க மறுத்தார்இதனிடையே, அன்னா ஹஸாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, டெல்லி போலீசார் விதித்த நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை அன்னா ஹஸாரே குழுவினர் ஏற்க மறுத்ததால்தான் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும், அங்கு 50 கார்கள் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்உலகின் எந்தப் பகுதியிலும், நிபந்தனைகள் இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என்று சிதம்பரம் சுட்டிக்காட்டினார். தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தை நாட உரிமை உண்டு என்றும், நீதிமன்றம் மட்டுமே விதிமுறைகளை மாற்ற உத்தரவிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக
ஊழலுக்கு எதிரான எழுச்சி

அன்னா ஹஸாரே உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, வேதனையானது என்று குறிப்பிட்ட சிதம்பரம், ஜனநாயக நெறிமுறைகளின்படி போராட்டம் நடத்துவது எதிரானது அல்ல இந்த அரசு என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் முடக்கம்

இதனிடையே, அன்னா ஹஸாரே உள்ளிட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினை எழுப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்ப்பு ஏன்?

ஊழலை ஒழிக்க, வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
அரசுத் தரப்பிலும், அன்னா ஹஸாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் தரப்பிலும் பரஸ்பரம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பும், வரைவு லோக்பால் மசோதாக்களை தயாரித்தன. லோக்பால் விசாரணை வரம்புக்குள், பிரதமர், நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளையும் கொண்டுவர வேண்டும் என்ற சிவில் சமூகத்தின் வரைவு மசோதாவை ஏற்க அரசு மறுத்துவிட்டது. அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்ட மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை என சிவில் சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை அரசு கையாளும் விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’