வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தூக்குத்தண்டணையை இரத்துச் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை – ஜெயலலிதா

ந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரவித்துள்ளதாவது., தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பலரது கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து முதல்வராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் , 2000 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இதுவெல்லாம் இரட்டை வேடம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயற்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும். இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவரினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்துகின்றேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்துக் கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வசப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன். என்றும் ஜெயலலிதா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’