வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 ஆகஸ்ட், 2011

சாந்தன், பேரறிவாளன், முருகனின் தூக்கு தண்டனையை ரத்து செய்க - கருணாநிதி வேண்டுகோள்

சா ந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலே உள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரை ஏழு நாட்களில் தூக்கிலிட வேண்டுமென்று குடியரசு தலைவர் உத்தரவு வந்துவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளதைப் பற்றி சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோதே - தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிற கருத்தினை வலியுறுத்தியதோடு - அந்தக் கருத்து இந்த மூவர்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த வாலிபர்கள் மூவருமே இருபதாண்டுகள் சிறையிலே இருந்து விட்டார்கள். அவர்கள் செய்தது குற்றமே ஆயினும் - அவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையிலே இருந்ததை மனதிலே கொண்டு - மனிதாபிமானத்தோடு - 'மறப்போம், மன்னிப்போம்' என்ற நிலையில் - உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விடுக்கின்ற வேண்டுகோளினையேற்று - தூக்குத் தண்டனையிலிருந்து அவர்களை காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது. குறிப்பாக தமிழகத்திலே உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் உருக்கத்தோடு அவர்கள் மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டுமென்று விடுத்துள்ள வேண்டுகோளைப் புறக்கணிக்காமல் இரக்கச் சிந்தனையோடு இதை அணுகிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மத்திய அரசை ஆளும் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்சினையிலே அக்கறையோடு மூன்று உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு - இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’