வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 ஆகஸ்ட், 2011

புலிவேஷம் என் இசை வாழ்க்கைக்கு திருப்புமுனை! - ஸ்ரீகாந்த் தேவா சிறப்புப் பேட்டி

ர்கே நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள புலிவேஷம் படம் என் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. பாண்டியராஜனின் டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 58 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போது புலிவேஷம், ஜெயம் ரவி நடிக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பூலோகம் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனது இசை அனுபவங்களை ஸ்ரீகாந்த் தேவா நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் இசையின் போக்கு முன்பு மாதிரி இல்லை. இப்படி வேணும் போட்டுக் கொடுங்க என இயக்குநர்கள்ம கேட்கிறார்கள். எனவே வேறு யோசனையின்றி நாங்களும் அதைச் செய்கிறோம். நல்ல பாடல், மெலடிப் பாடல் போடலாம் என்றால் அது பழசு என்று ஒதுக்கும் அபாயம் உள்ளதால்தான் என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள் தங்கள் ட்ரெண்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். தமிழ் சினிமாவில் 2000 இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் 50 பேர்தான் பிஸியாக உள்ளனர். காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளாவிட்டால் இவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. 50 வயலின்கள்... முன்பெல்லாம் 50 இசைக்கலைஞர்களை வைத்து பாடல்கள் கம்போஸ் செய்வார்கள். அதுவும் லைவாக. இப்போது 5 பேர் வாசிப்பதை ரெக்கார்ட் செய்து கம்ப்யூட்டரில் 50 பேர் வாசிப்பது போல மாற்றிக் கொள்கிறார்கள். டெக்னாலஜி அப்படி. இது கொஞ்சம் சிக்கனமானது என்றாலும், லைவாக பாட்டு பன்றதுல உள்ள ஜீவன் கம்ப்யூட்டர் மயமானதில் செத்துவிட்டது என்பதுதான் உண்மை. ராஜாவின் இசை "போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..." என்ற பாட்டு இன்னைக்கும் மனதில் அப்படியே நிற்கக் காரணம், அந்தப் பாட்டை ராஜா சார் ஜீவனுடன் கொடுத்திருந்ததுதான். அவர் எப்போதும் லைவாகத்தான் இசையைத் தருவார். அதனால்தான் அவர் பாடல்கள் அப்படியே இருக்கும். ராத்திரி 8 மணிக்கு மேல போனா எங்கும் ராஜா சார் பாடல்கள்தான். அப்படியே காரில் கேட்டுக் கொண்டு சுகமாக பயணிக்கலாம். கானா, குத்துப்பாடல்கள் சீக்கிரம் ஹிட்டாகும். ஆனால் அதே வேகத்தில் அழிந்துவிடும். ஒரு 'ஓ போடு' ஹிட்டாச்சு. அப்புறம், 'அப்படி போடு...' வந்துச்சு. பிறகு மன்மதராசான்னாங்க, போட்டு தாக்குன்னு பாடினாங்க. இப்ப ஜில்லாவிட்டு ஜில்லா வந்து பாட்ட கேட்கிறாங்க. ஆனால் இவை எதுவும் நிரந்தரமில்லை. மெலடி பாடல்களோ காலத்தால் அழிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை பாட்டை இன்றைக்கும் கேட்கிறோம். போவோமா ஊர்கோலம் என்றைக்கும் கேட்கிறோம். இளையராஜா வழியில்.... பி.வாசு இயக்கிய, ஆர்.கே. நாயகனாக நடித்துள்ள 'புலிவேஷம்' படத்தில் 'வாரேன் வாரேன் கூடவாரேன் ஏழு ஜென்மத்திலும் என் உசிரை தர்றேன்....' என்ற மெலடி பாட்டை போட்டு இருக்கிறேன். இந்த பாட்டைக் கேட்டு, என் படங்களில் இளையராஜாவுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாதான் 'மெலடி' பாட்டை நல்லா தந்திருக்கார் என்று வாசு சார் பாராட்டினார். இந்த பாராட்டை 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதற்கு சமமா நான் மதிக்கிறேன். வாசு சாரோடு பணியாற்ற ஆரம்பித்துபோது நான் கொஞ்சம் பயந்தேன். காரணம் என் தந்தை தேவா அந்த அளவு சொல்லி வைத்திருந்தார். ஆனால் அவரும் நானும் கொஞ்ச நேரத்திலேயே நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். நல்ல குரல் வளம் அவருக்கு. நான் இசைக்க, அவர் பாட, ஒரே கலகலப்புதான். வாரேன் வாரேன்... ட்யூனை போட்டபோது பி வாசு பக்கத்தில் இருந்தார். அவருக்கு இசையிலும் ஞானம் அதிகம் என்பதால், என்ன மாதிரி பாட்டு வேண்டும் என்று அழகாக கேட்டு வாங்கி விட்டார். மொத்தம் 5 பாடல்கள். அத்தனையும் அருமையாக வந்துள்ளன. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆர்கேவின் ஆர்வம்... இங்கே ஹீரோ ஆர்கே சாரைப் பற்றி சொல்லியாக வேண்டும். இசையில் அவருக்கும் ஆர்வம் அதிகம். அதனால்தான், என்ன செலவானாலும் பரவாயில்லை, இசை லைவாக இருக்க வேண்டும் என்றார். அதனால் 35 வயலின் கலைஞர்களை வைத்து பின்னணி இசை சேர்த்தோம். ரொம்ப நாளைக்குப் பிறகு நானே நிறைவாக உணர்ந்தது புலிவேஷம் பட பின்னணி இசை சேர்ப்பின்போதுதான். இதற்கான முழு பெருமையும் ஆர்கேவைச் சேரும். அவர் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் சாத்தியமில்லை," என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’