வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா.

லங்கையில் எஞ்சியிருக்கின்றதான மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மேலும், நிலையான சமாதானத்துக்கு அத்தியாவசியமானதென ஐக்கிய நாடுகள் சபையினால் கருதப்படுகின்ற நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவக் கூடிய வாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மனித நேய தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே ஐக்கிய நாடுகளின் இங்கைக்கான மனித நேய இணைப்பாளர் சுபினே நெண்டி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தாத்தில் பயங்கரவாதிகளால் ஐ.நா. அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உலகின் பலபாகங்களிலும் இருந்து அங்கு சென்று பணியாற்றிய எமது மனித நேயப் பணியாளர்கள் பலர் பலியாயினர். இந்தத் தாக்குதலில் ஐ.நா.வின் பிரதிச் செயலாளர் நாயகம் செர்கியே டி. மெல்லோவும் கொல்லப்பட்டார். அதிகமானோர் காயங்களுக்குள்ளாகினர். இது போன்ற அனர்த்தத்தங்கள் இன்று உலகெங்கிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களும் அடங்குகின்றன. கடந்த மே மாதம் ஜப்பானைத் தாக்கிய சுனாமி அனர்த்தத்தின்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் அதிகமானோர் காணாமலும் போயிருந்தனர். இது இவ்வாறிருக்க ஆபிரிக்காவின் கிழக்குப் பிராந்தியத்தில் பசி, பட்டினி பரவியிருப்பதையும் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் 12.4 மில்லியன் மக்கள் அவசர உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பதையும் காண்கின்றோம். இதேபோல் கடந்த ஆறு மாதங்களாக மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் இடம்பெற்று வருகின்ற போராட்டங்களால் உடைமைகள் மட்டுமின்றி உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருப்பதுடன் அங்கு சமூக வாழ்க்கையும் சீர்குலைத்திருக்கின்றது. இவ்வாறான அனர்த்தங்களில் வயது வித்தியாசங்களோ பால் வித்தியாசங்களோ அல்லது நிற வித்தியாசங்களோ இன்றி சகலரும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கையின் தேசிய மனித நேய முயற்சியில் உதவக் கூடிய ஐ.நா.வின் பங்களிப்புத் தன்மையானது இன்று உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச மனித நேய தின விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் இலங்கையில் சுமார் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். வீடுகள், வியாபாரத் தலங்கள் சேதமடைந்ததுடன் விவசாய உற்பத்திகள் சேதமடைந்தன. கால்நடைகள் இறந்தன. இந்நிலைமைகளில் இருந்து மீட்சியை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச மனித நேய அமைப்புகளிடம் இருந்து 24 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சேகரிப்பதற்கு இயலுமாக இருந்தது. வடக்கில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மனித நேய உதவிகளும் இங்கு நினைவு கூரத்தக்கவையாகும். இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களை மெனிக்பாமிலும் ஏனைய முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களின் அவசரத் தேவைகளின் நிமித்தம் ஐ.நா. அரசாங்கத்துடன் நெருங்கிப் பணியாற்றியிருக்கின்றது. அதுமட்டுமல்லாது அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக மனித நேய பங்குதாரர்கள் பாடுபட்டனர். இதேவேளை சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள் தமது கௌரவமான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மனித நேய சமூகத்துடன் இணைந்து இலங்கை அரசு இத்திட்டத்திற்காக 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியிருக்கின்றமையை ஐ.நா. பாராட்டுகின்றது. இங்கு எஞ்சியிருக்கும் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு தயாராகவே இருக்கின்றது. அத்துடன் நிலைத்து நிற்கக் கூடியதும் நிலையானதுமான சமாதானத்திற்கு அத்தியாவசியமான ஐ.நா. வினால் கருதப்படுகின்ற நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புக்களை ஐ.நா. அதிகமாக எதிர்பார்த்திருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. செயலாளர், செயலாளர் நாயகத்துடன் நானும் இணைந்து கொண்டவனாக இலங்கையில் மனித நேய தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபடுகின்ற சகல தனி நபர்களையும் அவர்களது மகோன்னதமான சேவைகளையும் இலங்கை மக்களுக்கு உதவுவதில் காட்டி வருகின்ற அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கின்றோம் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’