வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

சாட்சியங்களில் 85 வீதம் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன: லக்ஷ்மன்

ற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு பதிவுசெய்துள்ள சாட்சியங்களில் 85 வீதமானவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையை வரைவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் எந்தமட்டத்தில் உள்ளன என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு கடந்த காலங்களில் விசாரணை அமர்வுகளின் மூலம் பதிவு செய்த சாட்சியங்களில் 85 வீதமானவற்றை ஆய்வு செய்து முடித்துவிட்டது.
மேலும் 15 வீதமான சாட்சியங்கள் ஆய்வு செய்யப்படவேண்டியுள்ளன. அவற்றை ஆய்வு செய்து முடித்ததும் நேரடியாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். எனினும் தற்போதைய நிலைமையில் நாங்கள் வெளியிடவுள்ள இறுதி அறிக்கையின் முதற்கட்ட வரைபை தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஏற்பாடாகியுள்ளது. தற்போதைய நிலைமையில் அந்த திகதிக்குள் எம்மால் அறிக்கையை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சாட்சியங்களை ஆய்வு செய்யும்போது தெளிவின்மை ஏற்படும்போது குறித்த சாட்சியத்தை வழங்கியவரை தொடர்புகொண்டு தெளிவுபடுத்தலை பெற்றுக்கொள்கின்றோம் என்றார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு கடந்த காலங்களில் கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் சாட்சியங்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’