இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக சென்னை புழல் சிறைச்சாலையில் 7 பேருக்கு பயிற்சியளிக்க அந்நாட்டு சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேற்படி மூன்று குற்றவாளிகளும் வேலூர் சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறைச்சாலையிலேயே அவர்களுக்கான தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்படவுள்ளது. இருப்பினும் அந்த தண்டனையை நிறைவேற்ற வேலூர் சிறைச்சாலையில் எவரும் இல்லாத பட்சத்திலேயே, சென்னையிலுள்ள புழல் சிறைச்சாலையில் ஏழு பேருக்கான பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலூர் மத்திய சிறைச்சாலையானது, 171 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு இரு தூக்கு மேடைகள் உள்ளன. ஆனால், சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தனியாக பணியாளர்கள் எவரும் இல்லை. 28 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியொருவரை கொலை செய்த குற்றத்துக்காக சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அதன்பிறகு கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறைச்சாலையில் எவரும் தூக்கிலிடப்படவில்லை. இதனால் இரு மேடைகளும் துருப்பிடித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்போது அவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றன. இவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த கருணை மனு மீது கடந்த 11 ஆண்டுகளாக நடந்த விவாதங்கள் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற தமிழக வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் புதுடில்லியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த கருணை மனுக்கள் மீது இந்திய மத்திய உள்துறை அமைச்சு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது, இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் எந்த விதமான கடிதப் போக்குவரத்து நடைபெற்றன என்பது பற்றிய விபரங்களை இந்த வழக்கறிஞர்கள் கேட்கவுள்ளனர்.
முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சுபா என்பவருக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினரான சிவராசன் என்பவருக்கு தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாக சாந்தன் மீதும், ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்குக்கான பற்றரியினை வாங்கிக் கொடுத்தார் என்று பேரறிவாளன் மீதும் குற்றங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Set as favorite
Bookmark
Email this
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’