த மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்குமாறு இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முழு உணர்வுள்ளவராக இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தெரிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இச்சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம், இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக 'இண்டியா எக்ஸ்பிரஸ்' பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் நேற்று கொழும்பிலிருந்து புதுடில்லிக்கு திரும்பியுள்ளார்.
'நான் ஜெயலலிதாவுடன் நல்லுறவை பேணி வருகின்றேன். இவ்விடயம் குறித்து முதல் தடவையாக அவருடன் கலந்துரையாடினேன். சட்டசபையில் எவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இவ்வுறவின் சிக்கல் தன்மை மற்றும் அதை கையாளுவதிலுள்ள யதார்த்தங்கள் குறித்து அவர் முழு உணர்வுள்ளவராக உள்ளார்' என்று இந்திய பிரதமர் கடந்தவாரம் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’