யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்., கேம்பிரிச் முகாமைத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'வடக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் இருக்கும் போதுதான் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சமூகப் பொருளாதாரத்தையும் வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் உறுதியான நிலைப்பாடு ஒன்றை எடுத்து இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த போதும் வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் தேவையற்ற ஒன்று என நான் கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்கள் வடபகுதிக்கு வருகை தந்து வடக்கின் அபிவிருத்தியை எவ்விதம் செய்யலாம் என சில திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.'
வன்னி யுத்ததில் பொது மக்கள் இறந்துள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா? எவ்வளவு போர் இறந்துள்ளார்கள் என்பது ஏதும் தெரியுமா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
'யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் கலாநிதி எஸ்.மோகன், அமைச்சின் அதிகாரியான கலாநிதி ஜி.வி.திலகசிறி மற்றும் அரசியல் பிரிவு பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’