ந டைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு வடக்கில் அமைச்சர்கள் பட்டாளத்தை குவித்திருப்பதன் மூலம் அரசாங்கம் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் சட்டங்களையும் அவமதித்து அவற்றை அப்பட்டமாக மீறியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
வடக்கின் தேர்தல் நிலவரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறிதரன் எம்.பி. மேலும் கூறுகையில்:
வடக்கில் தற்போது அதிசயங்கள் இடம்பெற்று வருகின்றன. வீதிகள் திறப்பு, புனரமைப்பு,அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது வங்கிக் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அதேவேளை தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்பி இயந்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதியும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் இங்கு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்ட விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையனைத்துமே தேர்தல் சட்டங்களை அவமதிக்கின்ற செயற்பாடுகளாகும். மேலும் கிராம உத்தியோகத்தர்கள் அரச ஊழியர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார் ஊழியர்கள் அழைக்கப்பட்டு ஆளும் தரப்பினால் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென ஆளும் தரப்பினர் பாரிய அளவில் அரச வளங்களை விரயம் செய்து வருகின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேர்தல்கள் சட்டங்களை சுட்டிக்காட்டி தேர்தல்கள் ஆணையாளர் தடைவிதித்திருக்கின்ற போதிலும் ஆளும் கட்சியினர் அதனை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் வடக்கில் நடைபெற விருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் நீதியானதாக சுதந்திரமானதாக அமையப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
உள்ளூராட்சித் தேர்தலானது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாரிய விடயமல்ல எனினும் அரசாங்கம் வடக்கில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டு வருகின்றது.
இது குறித்து நாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேள்வியெழுப்பியபோது சட்டங்களை அமுல்படுத்துமாறு பணிக்கவே என்னால் முடியும் என்றும் தேர்தல்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே இருக்கின்றது. என்றும் எம்மிடம் தெரிவித்தார். இந்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது ஆணையாளரையும் தேர்தல்கள் சட்டங்களையும் அவமதித்துள்ளமை நன்கு புலனாகின்றது.
கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்பவற்றை எமது மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. மிகத் தெளிவாகவே இருக்கின்ற அவர்கள் மேற்போன்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பார்கள் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் சக்தியாக கூட்டமைப்பே திகழ்கின்றது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல்கால ஏமாற்று வித்தைகளை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’