வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 ஜூலை, 2011

திமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணாமல் போன அழகிரி!

திமுகவில் திராவிட இயக்கப் பணிகள் என்றும் போல் கருணாநிதி தலைமையில் தொடரும் என்று அக் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நமது திராவிட இயக்கப்பணிகள் என்றும்போல் தலைவர் கலைஞர் தலைமையில் தொடர்கிறது. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவரான கலைஞரின் தொண்டு தொடரவும், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வழிகாட்டவும் அவர் பல்லாண்டு காலம் நலத்துடன் மகிழ்ந்து வாழ விரும்பி இப்பொதுக்குழு, தன்னுடைய அன்பார்ந்த வாழ்த்தினையும், விழைவினையும் தெரிவித்து மகிழ்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைமைக்கழகம் முதல் கிளைக்கழகம் வரை உள்ள அமைப்புக்கள் செயல்படுகின்ற முறை குறித்தும்-மேலும் வலுவாகவும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்துவதற்கு எத்தகைய முக்கியமான மாற்றங்களை-கழகஅமைப்புகளில், அனைத்து மட்டங்களிலும் செய்யலாம் என்ற ஆலோசனைகளை கழகத்தின் தலைமை முதல் மாவட்ட அமைப்புக்களிலே உள்ள நிர்வாகிகள் வரையில் தங்களது கருத்துக்களை வழங்கலாம் என்று அறிவித்ததுடன்-கழக அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்து அனுப்பியுள்ள விளக்க கடிதங்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய கருத்துக்களை ஆய்வு செய்து -கழக சட்ட திட்டத்தில் இணைத்து செயல்பட்டால் மேலும் கழகம் வலிவும், பொலிவும் பெற்று நமது உயிரனைய கொள்கையாம் திராவிடஇன எழுச்சி எனும் குறிக்கோளை அடைந்திட முடியும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு தலைமைக்கழகத்தில் வந்து குவிந்துள்ள கழக அமைப்புகளின் வலிவுக்கும், பொலிவுக்கும் ஆக்கம் தேடும் முயற்சிக்கு உதவிடக்கூடிய ஆயிரக்கணக்கான அந்த கடிதங்களின் தொகுப்பை தலைமைக்கழகத்தின் சார்பில் கழக சட்ட திட்டங்கள், கொள்கை குறிக்கோள்களுக்கான அடித்தளத்து அச்சாணியாக பயன்படுத்த, மேலும் பரவலாகவும், ஆழமாகவும், அழுத்தமாகவும் சிந்தித்து செயல்பட வழிகாட்டுகின்ற வகையில் கருத்துக்களை ஆராய்ந்து அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்திட உரிய ஆலோசனைகளை கூறுவதற்காகப் பின்வரும் கழக அமைப்பு முறை ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உறுப்பினர்களாக, டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., பொன்.முத்துராமலிங்கம், ஜி.எம்.ஷா, கு.பிச்சாண்டி, முகமது சகி, வி.பி.ராஜன், பாஸ்கர்சுந்தரம் ஆகிய ஏழு பேர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விவாதித்து, விரைவில் வழங்கிடும் புதிய சட்டதிட்டம் வகுப்பதற்கான வழிமுறைகளை அடுத்து வரும் பொதுக்குழுவில் வைத்து, அக்குழுவின் ஒப்புதலை பெறுவதென்று இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சட்டமன்ற வளாகத்திற்கு செல்லக்கூடாது என்ற ஒரே நினைப்போடு செயல்பட்ட ஜெயலலிதா, "பாவேந்தர்'' செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக அப்புறப்படுத்தியதோடு, அங்கிருந்த உயர் ஆய்வுக்கான அரிய பல தமிழ் நூல்களையும், பழம்பெரும் ஓலைச்சுவடிகளையும், தமிழ் சான்றோர்களின் திருவுருவ படங்களையும், அவசர அவசரமாக அப்புறப்படுத்திய நடவடிக்கையின் மூலம் தமிழ் செம்மொழிக்கே தாம் விரோதமானவர் என்பதை நிரூபித்துள்ளார். இச்செயலை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்டமாக-திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கிய பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியான தமிழ்மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இனியும் காலதாமதம் செய்யாமல் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு ஒன்றினை ஏற்கனவே அறிவித்தவாறு உடனடியாக அமைத்திட வேண்டுமென்று இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மாநில மொழியை பேசக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் நீதிகோரி அன்றாடம் உயர்நீதிமன்றங்களை அணுகக்கூடிய நிலையில்-நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிடப்படுவதை, அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மத்திய அரசை இந்த பொதுக்குழு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு-மாலை கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை:

இதற்கிடையே நேற்று முன்தினம் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அழகிரி நேற்று மாலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு கூட்டம் மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. கூட்ட முடிவில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும், கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் தங்கியிருந்த ஹோட்டல்களுக்குச் சென்றனர். மாலை 4 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூடியது. அப்போது கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், இதில் அழகிரி கலந்து கொள்ளவில்லை. அவர், தான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்தார். பின்னர் மாலை 6 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டு சென்றார்.

கருணாநிதி பேட்டி:

மாலையில் பொதுக் குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி,

கேள்வி: காங்கிரஸ் மீதான அதிருப்தியால் தான் மத்திய அரசில் திமுக புதிதாக 2 அமைச்சர்களை சேர்க்கவில்லையா?

பதில்: கட்சியின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் இங்கே சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மீது இருக்கிற அதிருப்தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள். அவர்கள் வெளிப்படுத்துகிற அதிருப்தியைதான் பொதுக்குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்து சொன்னார்கள். அதன் காரணமாகத்தான் எந்த மாற்றத்தையும், இப்போது நாங்கள் செய்யாமல், மத்திய அமைச்சர் பதவியை ஏற்காமல், புதிய அமைச்சர்களாக யாரையும் நியமிக்காமல், ஏற்கனவே இருக்கிற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள் என்று கூறியிருக்கிறேன்.

கேள்வி: பிரதமர் மன்மோகன் சிங் 2 இடங்கள் பற்றி திமுக அறிவிக்கும் என்று சொல்லி இருந்தாரே?

பதில்: தி.மு.கழகத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்து இருக்கிறேன்.

கேள்வி: சி.பி.ஐ. ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதை காரணமாக வைத்து நீங்கள் சி.பி.ஐ. மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: நாங்கள் சி.பி.ஐ. என்ற அமைப்பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப்பிலே உள்ள சிலர்- அந்த அமைப்பின் பொறுப்பிலே உள்ளவர்கள்- சில பேர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

கேள்வி: உங்களுக்கு பிறகு யார் உங்கள் கட்சியின் தலைமைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பொதுக்குழுவில் அடுத்த தலைமையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

பதில்: ஒவ்வொரு பொதுக்குழு கூடும் போதும், மீடியாக்கள் செய்கிற கலகத்துக்காக நாங்கள் ஆட்களையோ, தலைவர்களையோ மாற்றிக் கொண்டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி. அண்ணா காலத்தில் இருந்து சட்ட திட்டங்கள், விதிமுறைகளை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது-எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களைச் சேர்ப்பது-தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்றெல்லாம் திட்டமிட்டு பணி புரிகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த கேள்வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ்டத்துக்கு நாங்கள் மாற்றிக் கொண்டு இருக்க முடியாது.

கேள்வி: இன்றைக்குக்கூட பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர் எதிர்காலத்திற்கு ஒரு மூத்த தலைவரைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று பேசியிருக்கிறாரே? (இந்தக் கேள்வியைக் கேட்டது சேகர் என்ற பத்திரிக்கையாளர்)

பதில்: சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கால தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று கூட பேசினார்கள்... (சிரிக்கிறார்)

கேள்வி: பொதுக்குழுவின் மாலைக்கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?

பதில்: பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந்திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.

கேள்வி: இந்த தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என்று பா.ம.க. சொல்லியிருக்கிறது. கொங்குநாடு முன்னேற்றக்கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தி.மு.கழகத்தின் இந்த தோல்விக்கு நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’