வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 ஜூலை, 2011

நோர்வேயில் 92 பேரை கொன்ற நபர் இஸ்லாம், மார்க்ஸிசம், பல்கலாசாரத்தை எதிர்ப்பவர்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன் உதோயா தீவில் நடந்த இளைஞர் முகாமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம்செய்து குறைந்தபட்சம் 85 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் இச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அவரின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

32 வயதான அன்டெர்ஸ் பேரிங் பிரீவிக் எனும் இச்சந்தேக நபர் இஸ்லாம், மார்க்ஸிசம் பல்கலாசாரம் திறந்த குடிவரவுக்கொள்கை ஆகியவற்றை எதிர்ப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் ஒஸ்லோவில் அரசாங்கக் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர். அதன்பின் சிறிது நேரத்தில் உதோயா எனும் தீவில் நடைபெற்ற ஆளும் நோர்வே தொழிற்கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தவர்கள் மீது பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் குறைந்தபட்சம் 85 பேர்பலியாகினர்.
இவ்விரு சம்பவங்களிலும் மொத்தமாக 92 பேர் பலியாகிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நோர்வே பொலிஸார் கைது செய்தனர். இந்நபர் 32 வயதான அன்டெர்ஸ் பேரிங் பிரீவிக் என இனங்காணப்பட்டுள்ளார். நோர்வீஜியரான இந்நபர், தனது நடவடிக்கை பயங்கரமானது எனவும் ஆனால் அது அவசியமானது என்ற எண்ணம் தனது தலையில் இருந்ததாகவும் கூறியுள்ளதாக அவரின் சட்டத்தரணி சட்டத்தரணி  கெய்ர் லிப்ஸ்டட் அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை சில காலமாக  திட்டமிடப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டதாக பிரீவிக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றில் தனது நிலைப்பாடு குறித்து விபரிக்கவுள்ளதாக பிரீவிக் கூறியுள்ளார்.
இவர் முஸ்லிம்கள், மார்க்ஸிசவாதிகள், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
பீரிவிக் சுழியோடிகளின் உடை அணிந்து துப்பாக்கியுடன் தோன்றும் வீடியோவொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. 'சிலுவைப் போரை நாம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மார்க்ஸிச கலாசாரத்தை அடியோடு ஒழிப்பது எமது கடமை' என அந்தவீடியோவில் குறிப்பொன்று உள்ளது.
அதேவேளை, அன்ட்ரூ பேர்விக் எனும் புனைப்பெயரில் பிரீவிக்கினால் எழுதப்பட்டதாக கூறப்படும் 1500 பக்கங்கள் கொண்ட ஆவணமொன்றில் 'வேலை நிறுத்த கலாசாரத்திற்கும்' பல் கலாசார முறைமைக்கும் எதிரான கருத்துகள் காணப்படுகின்றன.
நோர்வே நீண்டகாலமாக குடியேற்றவாசிகளுக்கு திறந்த நாடாக காணப்படுகிறது. ஆளும் தொழிற்கட்சி குடிவரவை ஆதரிக்கிறது. ஆனால் குடியேற்றவாசிகளை எதிர்க்கும் முன்னேற்றக் கட்சியில் பிரீவிக் முன்னர் அங்கத்தவராக விளங்கியவர்.
பிரதமர் ஜேன்ஸ் ஸ்;டோல்டென்பர்கின் தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிலேயே அன்டெர்ஸ் பிரீவிக் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் சீருடை அணிந்திருந்த அவர், மாநாட்டில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளை ஒரு இடத்தில் திரளச் செய்துவிட்டு திடீரென துப்பாக்கிப் பிரயோகம்மேற்கொண்டார். இதில் 85 பேர் பலியாகினர். அதேவேளை குறைந்தபட்சம் 4 பேரை காணவில்லை. இவர்கள் நீந்தித் தப்புவதற்காக கடலில் குதித்த  நிலையில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சடலங்களைத் தேடுவதற்காக நோர்வே கடற்படையினர் சிறிய நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
நவீன உலக வரலாற்றில் தனியொரு துப்பாக்கிதாரியினால் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் சுட்டுக்கொல்லப்பட்ட உதோயா தீவுச் சம்பவம் விளங்குகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’