வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஜூலை, 2011

சனல் 4 புதிய வீடியோ என்மீதும் பாதுகாப்புச் செயலர் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்: சவேந்திர சில்வா

பிரிட்டனின் சனல் 4 அலைவரிசை புதிதாக ஒளிபரப்பிய வீடியோவானது தன்மீதும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகும் என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

'இலங்கையின் கொலைக்களங்கள்' எனும் வீடியோவை ஒளிபரப்பியதன் மூலம் இலக்குகளை அடைய முடியாமல் போனதால் தம்மை பழிவாங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லிமிரருடன் நியூயோர்க்கிலிருந்து தொலைபேசி மூலம் பேசுகையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கூறினார்.
சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் எனக்கு உத்தரவிட்டதாக, இறுதியாக ஒளிபரப்பான வீடியோவில் பெர்னாண்டோ எனக் கூறப்படும் ஒரு நபர் தெரிவித்துள்ளார்.
58ஆவது படைப்பிரிவின் தளபதி என்றவகையில் எனது படையணி தளபதிகளுக்கும் கட்டளைத் தளபதிகளுக்கும் என்னால் எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பெர்னாண்டோ என்ற ஒருவர் அங்கு இருக்கவில்லை. அத்துடன் யுத்தத்தின் இறுதியில் எனது படைப்பிரிவிலிருந்து எந்த உத்தியோகஸ்தரும் விலகியோடவும் இல்லை என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறினார்.

'தலைகள் இல்லாத சடலங்களை தான் கண்டதாகவும் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஊடகங்கள் அங்கிருந்தன, சிப்பாய்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரும் மோதலின்போது அத்தகைய காட்சிகளை காணவில்லை என உறுதியளிக்கிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
சனல் 4 ஊடகவியலாளர்களுடனான அனுபவம் குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், தன்னை எதிர்கொள்வதற்காக சனல் 4 ஊடகவியலாளர்கள் நீண்டகாலமாக தன்னை பின்தொடர்ந்தாக கூறினார்.

'நியூயோர்க்கில் அவர்கள் என்னை எதிர்கொண்டனர். என்னை ஒரு நிமிடம் செவ்வி காணப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் அவர்களுடன் 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்றேன்.
எனது உத்தியோகஸ்தர்களும் நான் வழங்கிய நேர்காணலை பதிவுசெய்தனர். நான் அவற்றை உள்ளூர் ஊடகங்களுக்கும் வழங்கினேன். சனல் 4வின் புதிய வீடியோவில் 80-90 சதவீமானவை இக்கொலைகளுக்கு என்னை குற்றம்சாட்டுவதாக உள்ளது.
முதலாவது வீடியோவை அவர்கள் ஒளிபரப்பியவுடன் நாம் பல அடிப்படைத் தவறுகளும் பக்கச்சார்பான கருத்துக்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியபின் அவர்கள் திரும்பி வரவில்லை.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான் இப்போது ராஜதந்திரியாக உள்ளபோதிலும் இன்னும் இராணுவ சேவையில் இருக்கிறேன். எனவே, பாதுகாப்புப் படையினரின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதற்காக இத்தகைய வீடியோக்களை ஒளிபரப்பும் சனல் 4 அலைவரிசையின் நம்பகத்தன்மையை அது கேள்விக்குறியாக்குகிறது' என அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’