ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் 
இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது. 
இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும், தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளருமான டாக்டர் குணதாச அமரசேகர, 
பூட்டானை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல், இலங்கையையும் அடிமைப்படுத்தவே உடபடிக்கையை கைச்சாத்திடப் போகிறேன் என அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கைக்கு வரு முன்பு ராஜீவ்காந்தி சென்னையில் தெரிவித்தார். இதனை இன்று நிறைவேற்றுவதற்காக இந்தியா மேற்குலகுடன் இணைந்து நிகழ்ச்சி நிரலை தயாரித்து முன்னெடுத்து வருகிறது. 
அதற்காகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்த அரசியலமைப்பு சட்ட விரோதமானது. 
எனவே ஜனாதிபதி தனது அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும். அத்தோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் எம்.பி.க்கள் மட்டுமே அங்கத்துவம் வகிப்பார்கள். இவர்களின் தீர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இத் தெரிவுக் குழுவில் தேசிய அமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் அவ்வாறான தெரிவுக் குழுவினால் முன் வைக்கப்படும் தீர்வு தொடர்பில் மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றார். இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் உறுப்பினரான டாக்டர் வசந்த பண்டார, சூடானை பிரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலே எமது நாட்டையும் பிரிப்பதற்கு சர்வதேசத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதனை நாம் தோல்வியடையச் செய்தோம். இன்று சூடானை பிரித்துவிட்டார்கள். அதனை இங்கு மேற்கொள்ள புதிய முயற்சிகளை இந்தியாவும் மேற்குலகமும் முன்னெடுக்கிறது. இந்த முயற்சிக்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள சில அமைச்சர்களும் துணை போகின்றார்கள். 
இவ்வாறானவர்களே 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குமாறு கருத்துக்களை வெளியிடுகின்றனர். 
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. எனவே அவர்களோடு பேசுவதால் பலனில்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது. 
ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்னவென்பதை அறிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கவில்லை. எனவே அரசாங்கம் தமிழ் மக்களின் கருத்துக்களை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரென கூறும் ஐ.தே.கட்சி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுக்கவே முயற்சிக்கிறது. ஜே.வி.பி இன்று அரச சார்பற்ற நிறுவனத்தைப் போன்று செயற்படுகின்றது. 
நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இளைஞர்களை ஜே.வி.பி தயார்ப்படுத்துகிறது என்றார். 
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எல்லே குணவன்ச தேரர், ஒமாரே கஸ்ஸப்ப தேரர், முன்னாள் ஓய்வு பெற்ற நீதியரசர், ராஜாவனசுந்தர, பேராசிரியர் பியசேன திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். 
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’