வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 ஜூன், 2011

பச்சிலைப்பிள்ளை பிரதேச செயலர் பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்


யு த்தத்தால் அழிந்து போயுள்ள பனை தென்னை வளங்களை மீள்நடுகை மற்றும் புதுநடுகைத் திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்ய முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்றைய தினம் (10) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் ஏனைய 04 பிரிவுகளிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்ட போது 04 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் யு.என்.டி.பி. யின் கோரிக்கைக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென ஹலோட்ரஸ்ட் எனும் கண்ணிவெடி அகற்றும் குழுவிற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வடமாகாண சபையால் வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுமெனவும் புதுக்காட்டு சந்திப் பகுதியில் பொது மலசலகூடத்தை அமைப்பதற்கு பிரதேச சபை விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

இலாபத்தை முன்னிறுத்தி செயற்படாமல் பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இ.போ.ச. பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டுமெனவும் பளை மத்திய கல்லூரிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களை நியமித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் இதன்போது அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்ந்துவரும் நிலையில் அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக அதிக வட்டியில்லாத கடனுதவியை பெற முடியும்.

மக்களின் பாவனை மற்றும் பயன்பாட்டுக்கேற்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் வீதிகளின் திருத்தப் பணிகள் துறைசார்ந்தோரால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

விவசாயம் நெற்செய்கையினை மேற்கொள்ளும் முகமாக முன்னுரிமை அடிப்படையில் குளங்களின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் புலோப்பளையில் இறங்குதுறை அமைப்பது மற்றும் கால்நடை ஊக்குவிப்பு தொடர்பாகவும் அமைச்சர் அவர்களால் ஆராயப்பட்டது.

முக்கியமாக யுத்தத்தால் அழிந்து போயுள்ள பனை மற்றும் தென்னை வளத்தை மீள்நடுகை மற்றும் புதுநடுகை திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் வீட்டுத் தோட்ட மானியத் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகளை நடுகை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்கும் அதேவேளை விரைவான அபிவிருத்தி நோக்கி முன்னேறுவதற்கு உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை அமைத்து அவற்றின் மூலமே பொருளாதாரத்தை ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரச்சன்னத்தில் இடம்பெறுவதால் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எவைதான் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துத்தான் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் தங்களுடைய கிராமங்களின் தேவைகள் குறைகள் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணும் ஒரு களமாக நாம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

நீண்ட காலமாக மக்களுக்கு இருந்து வருகின்ற பிரச்சினைகளில் பலவற்றை நாம் தீர்த்து வைத்துள்ளோம். அதேபோன்று எதிர்காலத்திலும் ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து இயல்பு வாழ்வை ஏற்படுத்த எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போது இப்பிரதேசத்தில் ஏராளமான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுள்ளன இடம்பெற்று வருகிறது. மேலும் பல பணிகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

வீதிகள், பாடசாலைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மின்சாரம் என பரந்துபட்ட அபிவிருத்திகள் இடம்பெறுகின்றது. எனவே இதன் முழுப் பயனையும் அனுபவிக்க மக்கள் சிறுது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் கடந்த ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 04 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.

அத்துடன் இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக அமைச்சர் அவர்கள் மகேஸ்வரி நிதியத்தினூடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் பிரதேச செயலர் முகுந்தன் உள்ளிட்டோருடன் துறைசார்ந்த திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’