வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 ஜூன், 2011

'கைதிகள் விபரங்களை உறவினர் பெறலாம்'

லங்கை பொலிஸின் ரி ஐ டி என்று அழைக்கப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் நேரடியாக பெறுவதற்கான மூன்று இடங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பொலிஸின் சார்பில் பேசவல்ல பிரசாந்த ஜயக்கொடி அவர்கள் பிபிசிக்கு கூறுகையில், ''இலங்கை பொலிஸின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தாம் தடுத்து வைத்திருக்கும், அல்லது முழுமையான விசாரணை முடிவடைந்த நிலையில் விடுதலை செய்திருக்கும் சந்தேக நபர்களின் விபரங்களை அவர்களது உறவினர்கள் பெறுவதற்காக மூன்று இடங்களை அறிவித்திருக்கிறார்கள்'' என்று கூறினார்.
சந்தேக நபர்களின் உறவினர்கள் ( அதாவது தாய், தந்தை,மனைவி, கணவன், மகன் , மகள் அல்லது பிற நெருங்கிய உறவினர்கள்) கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2வது மாடி அலுவலகம், வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகம், மற்றும் பூஸா அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவர் பற்றிய விபரங்களையும் தரமுடியும் என்றும் ஆனால், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இவ்வாறு எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை தன்னால் சரியாக தரமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போரின் இறுதி வேளையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் விபரங்களை பொறுத்தவரை அவர்களை இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் கையளித்திருந்தால் அது குறித்த விபரங்கள் தம்மிடம் இருக்கும் என்றும், ஆனால் அவ்வாறு கையளித்திராவிட்டால் அவை தம்மிடம் இருக்காது என்றும் பொலிஸ் தரப்புப் பேச்சாளர் கூறினார்.

இப்படியாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்த விபரங்களை, அவர்களது உறவினர்கள் அல்லாது, பொது நல அமைப்புக்கள் அல்லது வேறு எவருமோ பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தமது விபரங்களை, தமது உறவினர்கள் அல்லாத ஏனையவர்களுக்கு வழங்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள் என்றும் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.

இதேவேளை, இறுதிப் போரில் பல ஆயிரம் பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக இராண்னுவத்தினரே அறிவித்ததாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று தாம் அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டிருந்ததாக கூறியுள்ளார்.

ஆகவே பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அந்த விபரங்களை உறவினர்களுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். அப்படி அவர்கள் வெளியிடுகின்ற நிலையில் இராணுவத்தினரும் தம்வசம் உள்ள கைதிகளின் விபரங்களை வெளியிடும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’