வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 ஜூன், 2011

மத்திய அரசு எங்களை வேவு பார்க்கிறது-ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் ஏமாற்றுகிறது: அன்னா ஹசாரே

ழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவை வரையறை செய்வதில் கடும் சவால்களை சந்தித்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு அடுத்தடுத்து தொல்லைகளைத் தந்து வருகிறது.


இந் நிலையில் யோகா குரு ராம்தேவுடன் சேர்ந்து அன்னா ஹசாரேயும் கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய ஹசாரே,
ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஊழலை வேரறுக்க வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் மத்திய அரசிடம் இல்லை. லோக்பால் மசோதாவை வரையறுக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளை மத்திய அரசு ஏமாற்ற நினைக்கிறது.
ஊழலை ஒழிக்க என்னென்ன சட்ட திருத்தம் செய்ய வேண்டும், விசாரணை வரம்புக்குள் யார், யாரை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கூறிய கருத்துக்களை பரிசீலினை செய்வதாக உறுதி அளித்திருந்த மத்திய அரசு இப்போது ஏமாற்ற ஆரம்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்களுக்கு இழைக்கபடும் துரோகம். இந்த துரோகத்தை ஏற்கவே இயலாது. மத்திய அரசு சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கிறது.

மேலும் லோக்பால் மசோதா குழுவில் உள்ள சமூக ஆர்வலர்களை மத்திய அரசு வேவு பார்க்கவும் ஆரம்பித்துள்ளது.

நாங்கள் சொன்னதை மத்திய அரசு காது கொடுத்து கேட்க மறுக்கிறது. இப்போது பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று அறிவித்ததும் மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கும் இங்குமாக ஓடுகிறார்கள். ராம்தேவை அழைத்து வர மத்திய அமைச்சர்களே விமான நிலையத்துக்கு போக வேண்டிய அவசியம் என்ன?.

கறுப்புப் பண விவகாரத்தில் பாபாவுக்கு தவறான தகவல்கள் தந்து, அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய மத்திய அரசு நாடகம் போட்டது. ஆனால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதற்காக பாபாவை பாராட்ட வேண்டும். அவருக்கு எங்களது முழு ஆதரவு உண்டு, அவரது உண்ணாவிரதத்துக்கும் எனது முழு ஆதரவு உண்டு.

இருவருமே ஊழலை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது செய்த சில விஷயங்களை, இந்த முறை மத்திய அரசு செய்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளேன்.

ஊழலை ஒழிக்க நாங்கள் சேர்ந்து போராடுவோம். இனிமேல் அரசு அதிகாரிகள் வார்த்தைகளால் சொல்லும் வெற்று வாக்குறுதிகளை நாங்கள் நம்பவும் மாட்டோம், ஏற்கவும் மாட்டோம்.

ஊழலை எதிர்த்து ராம்தேவ் எழுப்பும் குரலுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள். அவருக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று ராம்தேவ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறார். ஆனால் மத்திய அரசு இதில் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

இதிலிருந்தே மத்திய அரசின் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இனியும் மத்திய அரசு வாய்மொழி உறுதி மொழிகளை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. வெற்று வாக்குறுதிகள் சொல்வதை விட்டு விட்டு செயலில் காட்ட வேண்டும்.

அதுதான் எங்களுக்கு தேவை. ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்யாத வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’