வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 ஜூன், 2011

டெல்லி சென்றடைந்தார் ஜெயலலிதா-அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

மு தல்வர் பதவியில் அமர்ந்த பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார். சென்னையிலிருந்து கிளம்பிய அவருக்கு அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் டெல்லி சென்ற ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் பெரும் திரளான அதிமுகவினர் கூடி வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழ்நாடு இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெயலலிதா நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளார்.

ஜெயலலிதாவின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்படுகிறது.

தனது பயணத்தின்போது ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது டெல்லியில் சோனியா காந்தி இல்லை என்று தெரிகிறது. எனவே இந்த சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவை, சோனியா சந்தித்தார் திமுகவுடனான கூட்டணி கிட்டத்தட்ட முறிந்தது போலாகி விடும் என்பதால் சோனியா, ஜெயலலிதாவை சந்திப்பதை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் அதிமுக வென்றதும் பிரதமரும், சோனியாவும் ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது டீ பார்ட்டிக்கு வருமாறு ஜெயலலிதாவை, சோனியா அழைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதை பின்னர் ஜெயலலிதா மறுத்தார். சோனியா குறித்து பேசக் கூட அவர் மறுத்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்..

திமுகவுடனான காங்கிரஸ் உறவு கசந்து போய் விட்ட நிலையில் இரு கட்சிகளுமே தங்களது சுய நலத்திற்காகத்தான் கூட்டணியை தொடர்நது கொண்டுள்ளன. எனவே வலுவான காரணம் கிடைத்தால், இரு கட்சிகளுமே கூட்டணியிலிருந்து விலகத் தயாராகவே உள்ளன. அப்படி ஒரு நிலை வரும்போது தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிகிறது.

எனவே இன்றைய ஜெயலலிதாவின் டெல்லி பயணம் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமரை சந்திக்கவுள்ள ஜெயலலிதா, தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கவுள்ளார். குறிப்பாக மின்பற்றாக்குறையைப் போக்க கூடுதல் மின்சாரம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி, மண்ணெண்ணெய் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பிரதமருடன் ஆலோசிக்கவுள்ளார்.

இதை விட முக்கியமாக இலங்கைப் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் குறித்தும் பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பிரதமரிடம் வைப்பார் என்று தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’