வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 மே, 2011

சிறார் போராளிகள் நிலைமை: ஐநா கவலை

லங்கையில் சிறார்களை போர் படையில் சேர்க்கும் முறை நின்றுவிட்டாலும், போர் நடந்த சமயத்தில் விடுதலைப் புலிகளாலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கருணா குழுவாலும் சேர்க்கப்பட்ட சிறார்கள் சிலரின் கதி என்ன என்று தெரியாமல் இருப்பதாக ஐ நாவின் துணைப் பொதுச் செயலரும் சிறப்புத் தூதருமான ராதிகா குமாராசாமி ஐநாவின் பொதுச் சபைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி புலிகள் இயக்கத்தில் இருந்த 1373 பேர் நிலை குறித்து தெரியவில்லை என்றும் இதில் 15 பேர் சிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கருணா குழுவில் இருந்த 13 சிறார்களின் நிலையும் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர டிஎம்விபியுடன் ஒப்பந்தம் எட்டப்பட்ட தேதியில் இவர்களில் ஐந்து பேர் 18 வயதை தாண்டியிருக்க வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கையின்படி தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையம் இந்த ஐந்து பேரின் நிலை குறித்து விசாரித்தது. இவர்கள் டிஎம்விபியின் இனிய பாரதியின் கீழ் இயங்கியிருக்கின்றனர். ஆனால் ஜனவரி 14 ஆம் தேதியோடு முடிவடைந்த இந்த விசாரணையில் இவர்கள் இருக்கும் இடம் தெரியவரவில்லை.
மேலும் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ நா அறிக்கையிலேயே கருணா குழுவினரின் ஆட்பிடிப்பு நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பதாகவும் கடத்தப்பட்ட சிறார்கள் வெளிக்கந்தை நகருக்கருகே கருணா குழு அமைத்திருந்த பல்வேறு மூகாம்களில் ஒன்றில் தமது நேரத்தை கழித்ததாகவும் கூறப்பட்டிருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் சிறார் போராளிகளை சேர்த்ததில் இனிய பாரதிக்கு உள்ள பங்கு குறித்து ஏதுமே குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிய பாரதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா அதிகாரிகள் பல முறை விடுத்த கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தவறானவை என்றும், இது தொடர்பில் ஐ நா மீது வழக்கு தொடுப்பது குறித்து தான் ஆலோசித்து வருவதாகவும் இனிய பாரதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை

இந்த விடயம் தவிர இலங்கையின் வடக்கே தற்போது இருக்கும் சூழல் குறித்தும் இதில் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மீள் குடியேற்றம் நடைபெற்ற கிளிநோச்சி, முல்லைத் தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியில் பெருமளவு நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரில் சிலர் தமது சீருடை அல்லாமல் சாதாரண உடை அணிந்து கொண்டு இரவு நேரத்தில் பெண்களை அணுகி பாலியல் இச்சைக்கு உட்படுமாறு கேட்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.
பழி வாங்கப்படுவோம் என்ற அச்சம் நிலவுவதால் இது போன்ற விடயங்கள் குறைந்த அளவே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வட பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்களில், நிலைமை சற்று மேம்பட்டிருந்தாலும் பல பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களில் சில இராணுவத்தினரின் முகாம்களாகவும், இடம்பெயர்ந்தோர் தற்காலிகமாக தங்கும் கூடங்களாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல இலங்கையின் வட பகுதிக்கு செல்ல ஐநா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அங்கு திட்டமிடப்பட்டுள்ள பல பணிகள் காலதாமதமாகியுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’