வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 மே, 2011

சேர்பிய போர்க்குற்ற சந்தேக நபர் ஜெனரல் மிலாடிக் கைது

1990 களில் பொஸ்னிய யுத்தத்தின்போது இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்த போர்க் குற்ற சந்தேக நபரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரட்கோ மிலாடிக் சேர்பியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நெதர்லாந்தின் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேர்பிய ஜனாதிபதி பொரிஸ் டடிக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் யூகோஸ்லாவியின் ஒரு பிராந்தியமான பொஸ்னியாவில் இடம்பெற்ற யுத்தத்தின்போது 1995 ஆம் ஆண்டு ஸ்ரேப்ரெனிகா எனும் இடத்தில் 7500 முஸ்லிம்கள் படுகொலை செய்ததாக 69 வயதான ஜெனரல் மிலாடிக் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
1992 முதல் 1995 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற பொஸ்னிய யுத்தத்தின்போது பொஸ்னிய சேர்பிய இராணுவத்தின் படையதிகாரிகளின் பிரதானியாக விளங்கியவர் அவர். இனஅழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் போர்க்குற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு சேர்பிய அரசியல்வாதியான ரடோவன் கராட்ஸிக் கைதுசெய்யப்பட்ட பின்னர் தேடப்பட்ட வந்த முக்கிய பொஸ்னிய யுத்த குற்ற சந்தேக நபராக மிலாடிக் விளங்கினார். 2000 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் பதவியிலிருந்து நீக்கப்பட்டு; 2001 ஆண்டில்போர் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பின்னர் நெதர்லாந்தில் தடுப்புக்காவலில் இருந்தநிலையில் அவர் காலமானார். மிலோசவிக் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஜெனரல் மிலாடிக் தலைமறைவானார்.
அவரை கைதுசெய்யுமாறு 2007 ஆம் ஆண்டு ஐ.நாவின் பிரதான வழக்குத் தொடுநர் சேர்பியாவை வலியுறுத்தியதுடன் அப்படி செய்யத் தவறுவது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியா இணைவதை பாதிக்கும் எனவம் கூறியிருந்தார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் , ஜெனரல் மிலாடிக்கை கைது செய்வதற்கு உதவும் தகவல்களை வழங்குபவரக்ளுக்கு ஒரு கோடி யூரோ சன்மாணம் வழங்குவதாக சேர்பிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேர்பியாவின் வொஜ்வோடினா மாநிலத்தின் கடலோர பிராந்தியமொன்றில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை ஜெனரல் மிலாடிக் கைது செய்யப்பட்டுள்ளாக ஜேர்பிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மிலாடிக் கைது மூலம் சேர்பிய வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிந்துள்ளது எனவும் நாட்டிலும் பிராந்தியத்திலும் நல்லிணக்கத்தை அது கொண்டுவருகிறது எனவும் சேர்பிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இக்கைதுக்கு அமெரிக்க, பிரித்தானிய புலனாய்வுத்தகவல்களும் உதவியதாகவும் சேர்பிய ஜனாதிபதி பொரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார்.

இக்கைது நடவடிக்கையை ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியன வரவேற்றுள்ளன.

1992 ஆம்ஆண்டு யூகோஸ்லாவியா கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யூகோஸ்லாவியாவின் பொஸ்னியா, சேர்பியா, குரோஷியா, கொசோவோ முதலான பல குடியரசுகள் தற்போது சுதந்திர நாடுகளாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’