வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 மே, 2011

2ஜி: கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்

ரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் ஒருவருமான கனிமொழி வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கனிமொழியை காவலில் வைக்க உத்தரவிடக்கூடாது என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிட்டார்.

டி.பி. ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெற்ற சலுகைக்காக அந்தத் தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
ஆனால், கனிமொழியைப் பொறுத்தவரை, அதில் 20 சதம் பங்குகளை வைத்திருக்கிறாரே தவிர, அவர் அதில் இயக்குநராக இல்லை என்றும், அந்தத் தொகையை தொலைக்காட்சிக்குப் பெறுவதில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ராம்ஜெத்மலானி வாதிட்டார்.
இயக்குநர்கள் கூட்டம் எதிலும் அவர் கலந்துகொண்டதில்லை என்றும் ஜெத்மலானி சுட்டிக்காட்டினார்.
கனிமொழி, திமுக தலைவரின் மகள் என்ற காரணத்தினால் அவர் மீது குறிவைக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டிய ராம்ஜெத்மலானி, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும், சட்டத்தை மதித்து நடப்பவர் என்றும் எங்கும் தப்பியோடிவிட மாட்டார் என்றும் வாதிட்டார். மேலும், அவர் பெண் என்கிற காரணத்தினாலும் அவரை காவலில் வைக்கக் கூடாது என்று வாதிட்டார்.
கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஷரத்குமாரும் வெள்ளியன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அஃப்டாப் அகமது ஆஜரானார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, ஷரத்குமார் தவிர, சினியூக் நிறுவனத்தின் கரி்ம் மொரானி மற்றும் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள ஆஸிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் அனைவரும் வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆரஜாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

உடல்நலக்குறைவு காரணமாக, கரிம் மொரானி ஆஜராகவில்லை.

அதேநேரத்தில், ராஜீ்வ் அகர்வால் மற்றும் ஆஸிஃப் பால்வா ஆகியோர் சார்பில் நடைபெற்ற விவாதம் முடிவடையவில்லை என்பதால் சனிக்கிழமையன்று விசாரணை தொடரவுள்ளது.
அந்த வாதம் முடிந்தபிறகு, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை வழக்கறிஞர் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைப்பார். அப்போதுதான், கனிமொழி உள்ளிட்டோரை காவலில் வைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்துமா என்பது தெரியவரும்.
இதுவரை, கனிமொழி சார்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’