வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்று கூற முடியுமா?-கருணாநிதி

ரோட்டில் நேற்றுநடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பை முதல்வர் தனக்கே உரிய பாணியில் கூறவே கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது
.ஈரோட்டில் திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில்இளங்கோவனும் கலந்து கொண்டார். கூட்டணி முடிவாவதற்கு முன்பு திமுக அரசையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக சாடியவர் இளங்கோவன். ஒருகட்டத்தில் விலகிக் கொள்ள நேரிடும் என்று முதல்வர் எச்சரிக்கை விடும் அளவுக்கெல்லாம் இளங்கோவன் பேச்சு இருந்தது.

இந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் இளங்கோவனும் கலந்து கொண்டார். அத்தோடு நில்லாமல் முதல்வரையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். அவரது காலில் விழுந்து வணங்கினார். இதைப் பார்த்து திமுகவினர் ஆச்சரியமடைந்தனர்.

இதை முதல்வரும் தனது பேச்சில் வெளிப்படுத்தினர். முதல்வர் பேசும்போது, பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான். அதிசயம்! கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள். இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்றார். அப்போது இளங்கோவன் எழுந்து சென்று முதல்வர் காலைத் தொட்டு வணங்கினார்.

முதல்வர் கருணாநிதியின் முழுப் பேச்சு:

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தமிழகத்திலே தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு, இன்று பிற்பகல் குருகுலத்திற்கு வந்து சேர்ந்தேன். என்னுடைய குருகுலம், தமிழகத்தில் ஈரோடு நகரம் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். இந்த குருகுலத்தில், பேசுவது என்றாலே எனக்கு உடம்பு எல்லாம் புல்லரிக்கும். உள்ளம் எல்லாம் களிகொள்ளும். நெஞ்சமெல்லாம் இனிக்கும். தேகம் எல்லாம் சுழலும். அத்தகைய, குருகுலத்தில், இன்று நான் பல்லாயிரக்கணக்கில் குழுமி இருக்கிற உங்களை எல்லாம் காணும் போது, பேசுவும் வேண்டுமோ என்று தான் எனக்கு தோன்றுகிறது.

தம்பி இளங்கோவன் அவர்கள் இங்கு பேசும் போது, நான் நீண்ட நேரம் பல கருத்துக்களை இந்த கூட்டத்திலே சொல்ல இருக்கிறேன் என்று எல்லாம் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தின் உடைய மொத்த கருத்தாக நாளை, பத்திரிகைகளில் வரப்போகும் செய்தி, கருணாநிதியும் இளங்கோவனும் ஒரே மேடையில் என்பதுதான், இது தான் பெரிய அதிசயமாக செய்தியாக நாளை வெளிவரும் என்று எனக்கு தெரியும்.

நான், அப்படி செய்தி வெளியிடுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். இளங்கோவன் இன்றைக்கு இந்த மேடையிலே ஒரே வரிசையிலே எனக்கு பக்கத்திலே அமர்ந்து இருக்கலாம். ஆனால் இந்த இளங்கோவன், தந்தை பெரியார் இருந்த காலத்தில் நான் இந்த குருகுலத்தில் பயின்ற காலத்தில், என்னுடைய மடியில் தவழ்ந்த பிள்ளைதான் இந்த இளங்கோவன்.

பரவாயில்லை, ஜெயித்து விடுவோம்!

அப்படிப்பட்ட இளங்கோவனை, நான் காலையிலே வந்து இறங்கிய போது சந்தித்த நேரத்தில் சொன்னேன் பரவாயில்லை, ஜெயித்து விடுவோம் என்று சொன்னேன்.

ஏனென்றால் இங்கே பிளவுகளை உண்டாக்கி, பிரிவுகளை ஏற்படுத்தி, பேதங்களை வடிவமைத்து, இந்த இயக்கத்தை, இதனுடைய வெற்றிகளை தடுக்க இயக்கத்தின் வெற்றிகளை தடுக்க யார், யார் கருதுகிறார்களோ, அவர்களுக்கு எல்லாம், கிஞ்சித்தும், இடம் தரமாட்டோம் என்பதற்கு அடையாளமாக தான் இந்த எழுச்சி கூட்டம் நடக்கிறது.

நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இங்கே பேசிய நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்கள் உங்களுக்கு எல்லாம் எடுத்துரைத்தார்கள். ஆம். நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

யாருக்கு?, ஏதோ ஒரு காரியத்திற்காக, நண்பர்கள் ஒருவரிடத்தில் நமக்கு வேண்டியவர்களிடத்திலேயே வேண்டியதை கொடுத்தவர்களிடத்திலேயே நன்றி உடையவர்களாக இருப்பது என்பது வேறு. ஆனால் மொத்த சமுதாயத்திற்கும் உழைத்து, இந்த சமுதாயத்தையே ஒளிமிக்க இனமாக ஆக்கியவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது.

இங்கே வீற்றிருக்கின்ற அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவோடு, ஆட்சி புரிகின்ற இந்த சூழ்நிலையில் இப்போது இதே குருகுலத்தில் உங்களை எல்லாம் பார்த்து, எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்பதற்கு வந்து இருக்கிறோம் என்றால், வாக்குகளை பெற்று வசதியான வாழ்வுகளை அமைத்து கொள்ளலாம் என்பதற்காக அல்ல.

வாக்குகளை தருகின்றவர்களுக்கு, வசதியான வாழ்வை அளிக்க வேண்டும் என்பதற்காகதான், திராவிட முன்னேற்ற கழகமானாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆனாலும், பாடுபட்டு கொண்டு இருக்கிற இடத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

என்ன சொன்னார்கள். நான் முதல்வரானால், வீட்டிற்கு வீடு, அரிசி மூட்டை தூக்கி கொண்டு வந்து, அளந்து போடுவேன். நான் முதலமைச்சர் ஆனால் வீட்டுக்கு வீடு எண்ணெய் கலயத்தை தூக்கி கொண்டு வந்து எண்ணெய் ஊற்றுவேன். நான் முதலமைச்சர் ஆனால், இப்படி ஆனால், ஆனால் என்று சொன்னவர்கள், ஆவேன் ஆகவே என்னை ஆதரியுங்கள் என்று சொன்னார்கள்.

அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்?

இப்போது யார் முதல்வர் அந்த அணியில், இங்கே திட்டவட்டமாக எல்லோரும் சொல்லி விட்டார்கள். நீ தான் முதலமைச்சர் என்று உங்களை எல்லாம் சாட்சிகளாக வைத்து கொண்டு 6-வதாக அமைய போகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் நீ தான் என்று அறிவித்து விட்டார்கள். அப்படி அங்கே இருக்கிற 2 தலைவர்கள், ஒருவர் ஆண் தலைவர், இன்னொருவர் பெண் தலைவர். இந்த தலைவர்கள் யாரும் ஒரு மேடையில் இன்னார் தான் முதலமைச்சர்தான் என்று இது வரை சொன்னார்களா என்றால்..... ஒரு வேளை இதற்கு பிறகு கருணாநிதி சொல்லி விட்டான் என்று அதற்காக சொல்ல வேண்டும் சொன்னால், சொன்னார் என்று வரும், சொல்லாவிட்டால், தவறு என்று வரும்.

ஆனால் நம்முடைய அணியை பொறுத்த வரையில் உறுதியாக இருக்கிறோம். காரணம் இந்த அணியில் இருப்பவர்கள், எல்லாம் என்னை நம்புகிறவர்கள். நான் அவர்களை நம்புகிறவன். எப்படி நம்புகிறார்கள்? அனுபவத்தின் காரணமாக நம்புகிறார்கள்.

இன்றைக்கு பத்திரிகையிலே பார்த்தேன், தொழிலை நசுங்கச் செய்து விட்டார்கள் - தொழிலே இல்லை. தொழில் திட்டங்கள் அறவே இல்லாமல் போய்விட்டது. நான் வந்துதான் தொழிலை ஆரம்பிக்கப்போகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த அம்மையார் அவர்கள் கூறியிருக்கின்றார்கள், நான் விளக்க விரும்பவில்லை.

இன்றைக்கு தமிழகத்திலே ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கழக ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, அண்ணா அவர்களுக்கு பிறகு நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும் சரி, அமெரிக்காவில் இருப்பவர்கள், கொரியாவில் இருப்பவர்கள், ஜப்பானிலே இருப்பவர்கள், இங்கிலாந்திலே இருப்பவர்களெல்லாம் நாடி, ஓடி, தேடி வருகிறார்கள் என்றால் தமிழ் நாட்டிலே தொழில் தொடங்கத்தான் வருகிறார்கள்.

அப்படிப்பட்ட தொழில் தொடங்குவதிலே கூட, வெளிநாடுகளிலே உள்ளவர்கள் போட்டிப்போடுகின்ற அளவிற்கு தொழில் வளர்ந்திருக்கிறது. அந்தத் தொழிலை ஏதோ நசுக்கிவிட்டோம், தொழிலே இல்லை என்றெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார் என்றால் அது உண்மையா அல்லவா என்பதை நீங்கள் ஊரிலே இருக்கின்ற அறிவாளர்கள், அரசியல் மேதைகள் ஆகியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்தாண்டு காலத்தில், ஏற்கனவே பொறுப்பிலே இருந்த அ.தி.மு.க. அரசு மின் திட்டங்களை எதிர்காலத்திலே நிறைவேற்றி எத்தனை மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய மின் ஆலைகளை நிறுவ முடியும் என்று கணக்கிட்டு அதற்கான வேலைகளை தொடங்கியதா என்றால், இல்லை. நாம்தான் இப்போது தொடங்கியிருக்கிறோம்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இப்பொழுது தொடங்கப்பட்ட அந்த மின்சார உற்பத்தி நிலையங்கள் - இன்னும் மூன்றாண்டு காலத்திலே முடிவடைந்து உங்களுக்கு போதும் போதும் என்கின்ற அளவுக்கு மின்சாரம் கிடைக்கத்தான் போகிறது. ஒருவேளை அப்படி கிடைக்கப் போவதை எதிர்பார்த்து நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் பார்த்தீர்களா? மின்சாரம் வந்து விட்டது என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பவாதிகள் கூட இன்றைய தினம் உங்களிடத்திலே வாக்கு கேட்கலாம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். கருணாநிதியே அப்படி சொல்லி விட்டானே, இவர்கள் வந்தால் என்ன என்று மோசம் போய்விடாதீர்கள், ஏமாந்து விடாதீர்கள். யார் வந்தால், நமக்கு தொண்டாற்றக் கூடியவனாக, யார் வந்தால் நமக்கு கடமை புரிபவராக, யார் வந்தால் நம்முடைய கட்டளைக்கு கீழ் படிபவனாக இருக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டினுடைய தலையெழுத்தை நிர்ணயிப்பது அந்த நாட்டு மக்களாகத்தான் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் இருந்து விட முடியாது. இன்னும் சொல்லப் போனால் என்னைப் போன்ற ஒருவன் ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்து விட முடியாது. தலை இருந்தால் மாத்திரம் அது முடியும் என்று பொருளல்ல. தலைக்குள்ளே இருக்க வேண்டியது இருக்க வேண்டும். அவைகளெல்லாம் இருந்தால்தான் ஒரு நிர்வாகத்தை நடத்த முடியும். ஒரு ஆட்சியை கொண்டு செலுத்த முடியும்.

நாளைக்கு சபாநாயகரையும் அடிப்பர்!!

இவைகளெல்லாம் இல்லாமல் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்வதும் - பொதுமக்களுக்கு மத்தியிலே விகாரமாக - விரசமாக நடந்து கொள்வதும், யாரை வேண்டுமானாலும் அடிப்பேன், நீ யார் கேட்பது என்று சொல்வதும், நாளைக்கு சட்டசபையிலே சபாநாயகரைக் கூட அடித்து விட்டு, "என்னுடைய சபாநாயகர்தானே, அப்படித்தான் அடிப்பேன்'' என்று சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

நான் கேட்கிறேன், எதிரியை அடிப்பது - அதுவே குற்றம். நான் அடித்தது எதிரியை அல்ல. என் நண்பனைத்தான் அடித்தேன் என்றால், அதை யாரும் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், சட்டம் அதை அனுமதிக்காது. சட்டம் தமிழகத்திலே இப்பொழுது இருக்கிறதா இல்லையா என்பது என்னைப் பொறுத்தவரையிலே சந்தேகம்தான் ஏற்படுகிறது.

மன்னிக்க வேண்டும். முதலமைச்சராக இருக்கிற போது தமிழகத்திலே சட்டம் இருக்கிறதா என்பதைப் பற்றி சந்தேகப்படுகிறாயே நியாயமா என்று கேட்டால், நான் முதலமைச்சர் என்பது நீங்கள் சொல்லும்போதுதான் எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் தம்பி இளங்கோவனுக்குத் தெரியும். எமர்ஜென்சி காலத்துக் கொடுமைகள் தெரியும்.

மிசா காலத்து கொடுமை!

எமர்ஜென்சி கொடுமை இன்றைக்கும் நடக்கிறது. ஒரு பத்து ரூபாய் நண்பர்களிடத்திலே கொடுத்து சில்லரை வாங்கிக் கொண்டு வா என்றால், அவர் அதை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால் போலீஸ்காரர் பிடித்துக்கொண்டு, நீ யாருக்கு கொடுப்பதற்கு வாங்கிக் கொண்டு போகிறாய் என்று பிடித்துக் கொள்கிறார். அப்படிப்பட்ட கொடுமை மேல்மட்டத்திலே போட்ட அதிகாரத்தால் அல்ல, அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு ஒரு அடையாளம் தெரியாத, அடையாளம் காட்ட முடியாத, பெயர் சொல்லாத, விளம்பரம் இல்லாத ஒரு எமர்ஜென்சி நாட்டில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை உடைக்க, கூட்டணியிலே இருப்பவர்களை தளர்க்க - அவர்களை பயமுறுத்த இந்த நெருக்கடிக் கால கொடுமை இங்கே வீசப்படுகிறது. இவைகளையெல்லாம் நாங்கள் நிதானமாக பார்த்துக் கொண்டிருப்போம். அந்த நெருக்கடி காலத்திலே இவைகளையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்தான் நாங்கள்.

எனவே ஒரு முறை நெருக்கடியால் எங்கள் ஆட்சியைப் பறித்து விட்டால், அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் என்று பொருள் அல்ல, நாங்கள் இந்த நாட்டிலே தமிழன் இருக்கிற வரையில் - தமிழனுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வு இருக்கிற வரையில் எங்களுடைய அணிக்குத் தோல்வி கிடையாது, தோல்வி கிடையாது, என்றைக்கும் வெற்றி தான் என்பதை எடுத்துக் கூறி, அந்த வெற்றிச் சிகரத்திலே ஏறி நிற்க வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்கள் வாழ்ந்த இந்த ஈரோடு நகரத்தில் சபதங்கள் மேற்கொள்ளுங்கள் என்றார் கருணாநிதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’