வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதி

மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளன.

இப்போட்டிக்கு தற்போது தீவிரவாதிகள் மூலம் ஆபத்து வந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் போனதால் ஆத்திரமடைந்துள்ள தீவிரவாதிகள், வாங்கடே ஸ்டேடியத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அதன்படி வெடி குண்டுகள் நிரப்பிய கார் அல்லது வாகனம் மூலம் வாங்கடே ஸ்டேடியத்தின் வாசலில் மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் ராஜபக்சே ஆகியோரும் போட்டியை நேரில் பார்க்கவுள்ளனர். இதையடுத்து வாங்கடே ஸ்டேடியம் முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்டேடியத்தைச் சுற்றிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளன. ஸ்டேடியத்திற்குள்ளும், வெளியிலுமாக மொத்தம் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போட்டி நடைபெரும் மைதானம் உள்ள தெற்கு மும்பையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை காவல்துறையின் அதி நவீன கமாண்டோப் படையினரும் முக்கிய இடங்கள் மற்றும் ஸ்டேடியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. விமானப்படையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டியையொட்டி நாளை மகாராஷ்டிராவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’