வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஏப்ரல், 2011

யுத்தத்தின் வெற்றியினை பொய்யாக்குவதற்கு முயலும் சர்வதேச சூழ்ச்சியை முறியடிப்பதற்கு கைகோர்ப்போம்

யு த்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மே தின கொண்டாட்டங்கள் இம்முறை சுதந்திரமாக நடத்தப்படவிருக்கின்ற நிலையில் யுத்த வெற்றியினை பொய்யாக்குவதற்கு சர்வதேசம் சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

அந்த சூழ்ச்சிகளிலிருந்து நாட்டையும் ஜனாதிபதியையும் மீட்பதற்கு தொழிலாளர்கள் கைகோர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக மே தினத்தில் உரத்த குரலில் எமது நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டியது தொழிலாளர்களின் கடப்பாடாகும் என்றும் அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நடத்தவுள்ள மே தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 15 தொழிற்சங்க பிரதிநிதிகளே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் லெஸ்லி தேவேந்திர கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வீதியில் இறங்கி சுதந்திரமாக பேரணிகளை நடத்தி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைக் குரலை கொடுக்கும் வகையிலான சூழல் இன்றிருக்கின்றது. இவ்வாறான நிலையில் யுத்தத்தின் வெற்றியை பொய்யாக்குவதற்கு சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தருஷ்மன் குழுவின் அறிக்கையும் அதனையே எடுத்தியம்புகின்றன.
இவ்வாறான நிலையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யென்பதை உலகிற்கு உரத்த குரலில் எடுத்துரைப்பதற்கு மே தினத்தன்று கொழும்பில் கைகோர்க்கவேண்டும்.
தொழிலாளர்களின் உரிமையை அரசாங்கமும் ஜனாதிபதியும் காப்பாற்றிவருகின்ற நிலையில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்காக நாட்டில் வாழ்கின்ற 75 இலட்சம் தொழிலாளர்களும் கொழும்பில் கைகோர்க்கவேண்டும்.
சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்த போது வரவுசெலவுத்திட்டத்தின் மூலமாக அரச ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்பட்டதுடன் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் துறையினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வருமான வரியின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு தோள்கொடுக்கும் அரசாங்கம் தனியார் துறையினருக்கு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு எடுத்த முயற்சியை எதிரணியினர் தடுத்துவருகின்றனர். இந்த திட்டம் தனியார் துறையினருக்கு எதிரானது அல்ல என்றார். அரச சேவை தொழிலாளர் சங்க தலைவர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அரச சேவை தொழிலாளர் சங்க தலைவர் பியதாஸ கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மே தினமும் தொழிலாளருக்கு முக்கியமானது என்றாலும் இந்த மே தினம் வரலாற்று மேதினமாகும். தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற தோல்வி, வெற்றிகளை இனங்கண்டே அடுத்த தொழிலாளர்கள் தினத்திற்கான உரிமை குரலுக்கான கோஷங்கள் ஆராயப்படும்.
இந்த அரசாங்கத்திடமிருந்து பல உரிமைகளை தொழிலாளர்கள் வென்றெடுத்து கொண்டனர். தனி நபர் வருமானமும், தேசிய வருமானமும் அதிகரித்துள்ளது. அதன் பெறுபேறுகள் தொழிலாளர்களுக்கு சமாந்தரமாக கிடைக்காது.
எந்தவொரு அரசாங்கமும் செய்யாததை இந்த அரசாங்கம் தொழிலாளர்களுக்கு செய்துள்ளது. அதன் பயனாகவே பொருளாதார அபிவிருத்தியின் பெறுபேற்றை சகல துறையினரும் அபிவிருத்தி செய்து வருகின்றனர்.
1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையிலும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய உரிமைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனினும் தொழிலாளர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையில் இருந்த ஐக்கியம் 1978 ஆம் ஆண்டிருலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் இருக்கவில்லை.
அக்காலப்பகுதியில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், தனியார் மயம் மற்றும் பொலிஸாரின் அடாவடித்தனம் அதிகரித்திருந்தது. இதனால் தொழிலாளருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது எனினும் 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம் குறைந்தே இருக்கின்றன.
இவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து வருகின்ற அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்ச்சியை முறியடிப்பதற்கு சகலரும் மே தினத்தில் கைகோர்க்கவேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’