வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 மார்ச், 2011

திமுக காங் இழுபறி நீடிப்பு

திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள தொகுதி உடன்பாடு சிக்கல் இன்றும் முடிவுக்கு வரவில்லை.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக இன்று பிரதமரிடம் கடிதங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக, காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய மேலும் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறது. அதை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் இதை உறுதிப்படுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்த திமுகவும் காங்கிரஸும் தொகுதிகளைப் பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட காங்கிரஸ் பின்னர் அதை 63 ஆக உயர்த்தியதுடன், எந்தெந்தத் தொகுதிகள் என்பதையும் தாங்களே முடிவு செய்வோம் என காங்கிரஸ் கூறியதாக கருணாநிதி அறிக்கை விடுத்தார். அதையடுத்து, சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறி, மத்திய அரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, நேற்று இரவு வரை இரு கட்சிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. இன்று காலை பிரதமரைச் சந்தித்து திமுக அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களைக் கொடுக்க முடிவாகியிருந்த நிலையில், நேற்று பின்னிரவு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார். அதுகுறித்து, திமுக தலைவரிடம் தெரிவிப்பதாக பாலு உறுதியளித்தார்.
இதனிடையே, திட்டமிட்டபடி, திமுக அமைச்சர்கள் இன்று காலை ராஜிநாமா கடிதங்களுடன் டெல்லி வந்து சேர்ந்தார்கள். காலை 11 மணிக்குப் பிரதமரைச் சந்திக்கவும் நேரம் வாங்கப்பட்டது.
இதற்கிடையில், பிரணாப் முகர்ஜி அவர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அழைத்துப் பேசினார். அப்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான அமைச்சர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
அப்போது, ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்ட முகர்ஜி, இரு கட்சிகளும் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த நிலையில், காலையில் பிரதமரைச் சந்திக்கும் திட்டம் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், பிரணாப் முகர்ஜி மீண்டும் சென்னைக்குத் தொடர்பு கொண்டு, முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தரப்பும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவைத தெரிவிப்பதாக கருணாநிதியிடம் கூறிய பிரணாப் முகர்ஜி, மீண்டும் ஒரு நாள் அவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்தார். அதை கருணாநிதி அவர்களும் ஏற்றுக் கொண்டார். அதனால், திமுக அமைச்சர்கள் ராஜிநாமா செய்யும் முடிவும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நாளை எல்லா நிலையும் தெளிவாகிவிடும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, திமுக தலைமையுடன் பேசுவதற்கு முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சிதம்பரம் உள்ளிட்டோருடன் பிரணாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் ஆலோசனை நடத்தினார்கள். குறைந்தபட்சம் 61 இடங்களாவது காங்கிரஸ் பெற்றாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும், திமுக கூட்டணி வெற்றி பெற்றால், காங்கிரஸுக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என இப்போதே திமுக உத்தரவாதம் அளிக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களது கருத்துக்களைக் கேட்ட பிரணாப் முகர்ஜி, அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முயல்வதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், திமுகவைச் சேர்ந்த 18 எம்.பி.க்களின் ஆதரவு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முகர்ஜி சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ கட்சி ஆகியவை மத்திய அரசுக்கு ஆதரவளித்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகத் தெரிகிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த இரு கட்சிகளையும் களத்தில் எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் காப்பாற்ற அவர்களை எப்படி நம்பியிருப்பது என்று கருதுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களைப் பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மத்திய அரசின் ஸ்திரத்தன்மையையும் கவனத்தில் கொண்டுதான் திமுகவுடனான முறுகல் நிலைக்குத் தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’