வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 மார்ச், 2011

கனடாவில் இருந்து வந்த கணவன் ஆயுததாரிகளின் துணையுடன் மீசாலையில் மனைவியை கடத்திக்கொலை

மீசாலை கிழக்குப் பகுதியில் ஆயுததாரிகளின் துணையுடன் கணவனால் வெள்ளை வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த குகதாஸ் சாந்தினி (வயது 38) என்ற பெண்ணே கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
இவரது சடலம் இன்று காலை சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவர் குகதாஸ் வெளிநாடு சென்ற பின்னர் உறவினர்களுடன் வசித்து வந்தார்.
கனேடியக் குடியுரிமை பெற்றவரான செல்லத்துரை குகதாஸ் இம் மாதத் தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வந்து கொழும்பு வெள்ளவத்தையில் வெள்ளை நிற டொல்பின் வாகனம் (இல 253-3852) ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
நேற்று அவரும் வாகனச்சாரதியும் இணைந்து வவுனியாவில் வேறு இரு ஆயுததாரிகளையும் அழைத்துக் கொண்டு, மீசாலையில் கொல்லப்பட்ட சாந்தினி வசித்த வீட்டுக்குச் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த உறவினர்களைப் பொல்லுகளால் தாக்கினர்.

வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆயுததாரிகள் இருவரும் கொல்லப்பட்ட பெண்ணின் மகனான 15 வயதுடைய குகதாஸ் கிருபனின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதுடன் தாயையும் மகனையும் வெள்ளை நிற வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
சிறிலங்கா காவல்துறையினரிடம் உறவினர்கள் இதுபற்றித் தெரியப்படுத்தியதை அடுத்து, சிறிலங்கா படையினருடன் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் அந்த வெள்ளை வாகனம் நேற்று சிறிலங்கா காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
அதற்குள் கடத்தப்பட்ட பெண் சாந்தினி இருக்கவில்லை. அவரது கணவர் குகதாசும், வாகனச் சாரதியும் இருந்தனர்.
அவர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து யாழ். கச்சேரிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் காவல்துறையினர் தேடுதல் நடத்தினர்.
அங்கு தங்கியிருந்த பெண் ஒருவர், கொல்லப்பட்ட சாந்தினியின் மகனான குகதாஸ் கிருபனை தடுத்து வைத்திருந்தார்.
குகதாஸ் கிருபனிடம் விசாரித்த போது, ஆயுததாரிகள் இருவரும் காட்டுப்புறமான ஒரு இடத்தில் தாயை அடித்து இழுத்துச் சென்றதாக கூறினார்.
இந்தநிலையில் இன்று காலை சாவகச்சேரி பெருங்குளம் சந்தியருகே சாந்தினியின் சடலம் மீட்கப்பட்டது.
வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆயுத்தாரிகளே அவரை துவிச்சக்கர வண்டிச் சங்கிலியால் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் ஆயுததாரிகள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
அதேவேளை இந்த கடத்தல் மற்றும் கொலையில் தொடர்புடைய செல்லத்துரை குகதாஸ், வாகனச்சாரதி, மற்றொரு பெண் ஆகியோரை சிறிலங்கா காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆயுததாரிகள் இருவரும் தப்பிச் சென்றது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வவுனியாவில் இருந்து அவர்கள் கைத்துப்பாக்கிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளதும், சிறிலங்காப் படையினரிடம் சிக்காமல் தப்பியுள்ளதும் எவ்வாறு என்பது மர்மாகவே உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’