வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மார்ச், 2011

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது: மாவை சேனாதிராஜா

ரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற போதிலும் மக்களின் ஆணையினை மீறும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் தீர்வை குறித்த கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறினார். கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ""தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் அறிக்கை மற்றும் நம் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையிலேயே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் அரசியல் தீர்வைக் காணவும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை மீட்டெடுத்து தமது சொந்த நிலங்களில் மீளக் குடியேற்றுதல், வாழ்வாதாரங்களை மீள் கட்டமைப்புக்குட்படுத்தல், மீள் நிர்மாணம், சரணடைந்தவர்கள், காணாமல் போன இளைஞர்கள், யுவதிகள் மற்றும் நீண்ட காலம் நீதிமன்றக் காவலில் சிறைகளிலுள்ளோரின் விடுதலை மற்றும் புனர்வாழ்வு என்பன தொடர்பாகவுமே பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
முதற் சுற்றில் நமது மக்களின் மேற்படி அன்றாடப் பிரச்சினைகள் பற்றிப் பேசியதுடன் இரண்டாம் சுற்றில் உயர்பாதுகாப்பு வலயம், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசு எழுத்து மூலம் எமக்கு சாதகமான சில அம்சங்களை உள்ளடக்கிய பதிலைத் தந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இவற்றை நிறைவேற்றுவதிலுள்ள தாமதங்களை நீக்கவும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவதாவும் அமையும். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமெனவே நம்புகின்றோம்.
நமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மீது தீர்வு காணவும் அரசியல் தீர்வை எட்டவும் இந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் ஆதரித்து நிற்கின்றது. நம்மக்களிடம் பெற்ற நம்பிக்கை மதிப்பைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே இப்பேச்சுவார்த்தையில் நாம் வெற்றி பெற முடியும்.
இந்த வகையில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் செயலிலும் மக்களின் ஆணையை மீறும் வகையிலும் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம்.
தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதும் பேரழிவில் சிக்கிய நம்மக்களுக்கு விடிவை ஏற்படுத்துவதுமே எமது இலக்காகும். இந்த நோக்கில் சிறிதும் தளர்வு ஏற்படப் போவதில்லை.
குறிப்பாக 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாகவுள்ளோம்.
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றினை குறித்த ஒரு கால கட்டத்தினுள் எட்டவும் அதனை நடைமுறைப்படுத்தவும் நாம் இடையறா த தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுள்ளோம். மேலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை கொண்டு வாக்களித்து நம் பலத்தை உறுதி செய்தமைக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் நம்மக்களின் வாக்கைப் பெற்று துரோகமிழைத்துச் சென்ற பொடியப்பு பியசேன கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனத்திற்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளார்.
முழுமையான ஜனநாயக ரீதியிலும் நீதியானதாகவும் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமானால் இந்த பொடியப்பு பியனேவுக்கும் அவரை ஏற்றுக் கொண்ட அரசுக்கும் நம் மக்கள் தக்கபாடத்தைக் புகட்டுவர். தமிழினம் விடுதலைக்காகக் கொண்டிருக்கும் திடசங்கற்பத்தையும் நிரூபிப்பர். பாராளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குகளை விடவும் மிகப் பெருமளவில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து தமது அரசியல் நிலைப்பாட்டை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நிரூபிப்பரென்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்குண்டு. இந்த நம்பிக்கையினடிப்படையில் இந்த வாரம் முழுவதும் பிரசார நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’