வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 பிப்ரவரி, 2011

பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று தீப்பந்தப் போராட்டம்

முப்பது வருட யுத்தத்தின் பின்னர் இந்நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவரும் பழிவாங்கல் அரசியலால் சிறைவாசம் அனுபவித்து வருபவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்வரும் நான்காம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீப்பந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாட்டின் அனைத்துப்பிரஜைகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாக அக்கட்சி நேற்று அறிவித்தது
.இந்த போராட்டம் சுதந்திரத் தினத்தன்று இரவு 7 மணியளவில் புஞ்சி பொரளை சந்தியில் நடை பெறவிருப்பதாக அறிவித்த அக்கட்சி 1948 இல் இந்நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற சுதந்திரம் 2005 ஆம் ஆண்டுடன் பறி போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்; வருகின்ற 4 ஆம் திகதி அரசாங்கம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களில் கைதாகிய பலர் விடுவிக்கப்பட விருக்கின்றனர்.
ஆனாலும் 30 வருட கால யுத்தத்தினை வெற்றிகண்டு இந்நாட்டை மீட்டு மக்களுக்காக சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரான இராணுவ வெற்றியாளன் சரத்பொன்சேகா பழிவாங்கப்பட்ட நிலையில் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புலிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த அவரை சிறைப்படுத்திய நிலையிலேயே சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
அவர் நாட்டுக்கு எதிரான ராஜதுரோகத்திலோ அல்லது இராணுவ சட்டத்துக்கு எதிரான பாலியல் குற்றத்திலோ இல்லாவிட்டால் வேறு எந்த குற்றங்களில் ஈடுபடாத வராவார். அவர் இன்று சிறைக் கைதியாக ஆக்கப்பட்டுள்ளார்.
இந்நாட்டின் இருக்கின்ற சகலரும் சரத் பொன்சேகாவின் விடுதலையையே வேண்டி நிற்கின்றனர். அவரை விடுவித்துக் கொள்வதற்கென ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
உண்மையான சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டுமானால் சரத் பொன்சேகா சுதந்திரத்தினத்தன்று விடுவிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
மேலும் அதேதினத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தியதான தீப்பந்தம் மற்றும் விளக்குகள் சகிதமான போராட்டம் புஞ்சி பொரளை சந்தியில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நூதனப் போராட்டத்தில் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டுகின்ற சகல தரப்பினரும் இன, மத, கட்சி, பேதமின்றி கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.
1948 இல் இந்நாடு சுதந்திரம் பெற்றுக் கொண்டது. அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரமானது 2005 ஆம் ஆண்டுடன் பறிபோய்விட்டது. அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒரணியில் திரள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’