வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

நெடுந்தீவு மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது. புதிய பயணிகள் போக்குவரத்துக் கப்பல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கையளிப்பு.

நீ
ண்டகாலமாக நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கிவந்த கடற்போக்குவரத்திற்கு சிக்கலுக்கு தாம் உறுதியளித்தபடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல வசதிகளுடனும் கூடிய புதிய சிறயரக கப்பல் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
800 இலட்சம் ரூபா செலவில் கொழும்பு டொக்யாட் தளத்தில் கட்டப்பட்ட மேற்படி பயணிகள் கப்பலானது வடபகுதிக்கு எடுத்துவரப்பட்ட நிலையில் இன்றையதினம் அதன் வெள்ளோட்டத்தை அமைச்சரவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை முக்கியஸ்தர்கள் சகிதம் குறிகாட்டுவான் இறங்கு துறையினைச் சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடா வெட்டி கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பயணிகள் சகிதம் முதலில் புனித பூமியாம் நயினாதீவினை கப்பல் சென்றடைந்த நிலையில் அங்கு சிறி நாகபூசணி தேவஸ்தானம் மற்றும் நாகவிஹாரை ஆகியவற்றில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கப்பலின் உள்ளேயும் கைலாச ராஜூ குருக்களினால் விசேட பூஜை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.

சமய வழிபாடுகளைத் தொடர்ந்து புதிய பயணிகள் கப்பலானது நெடுந்தீவி;ற்கான தனது பயணத்தினை ஆரம்பித்தது. இச்சமயம் ஈபிடிபி கட்சி தொண்டர்கள் சகிதம் கப்பலில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் வேலணை பிரதேச சபைத்தலைவர் கருணாகரகுருமூர்த்தி அவர்கள் பயணிகள் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி புதிய பயணிகள் சேவையின் மகிழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

ஏறக்குறைய நடுக்கடலினை கப்பல் சென்றடைந்த வேளை நெடுந்தீவிலிருந்து தேசியக் கொடிகளுடனும் ஈபிடிபி கட்சிக் கொடிகளுடனும் சாரிசாரியாக வரத்தொடங்கிய பெருந்தொகையான கடற்றொழில் படகுகள் இக்கப்பலை சூழ்ந்து கொண்டு வரவேற்பளித்து அழைத்துச் சென்றன. தமக்கு பாதுகாப்பான சௌகரியமான புதிய பயணிகள் கப்பல் சேவை கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியைக் குறிக்கும் முகமாக நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் மேற்கொண்ட மேற்படி கடல் அணிவகுப்பானது கண்கொள்ளாக் காட்சியாக காணப்பட்டது.

நெடுந்தீவின் பிரதான இறங்குதுறையான மாவலித்துறையினை கப்பல் அண்மித்த போது ஏறக்குறைய முழு நெடுந்தீவு மக்களும் அங்கு திரண்டு வந்து வரவேற்பளித்தனர். இச்சமயம் பட்டாசுகள் வானவேடிக்கைகள் முழங்க பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் கப்பலுக்கு கோலாகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முக்கியஸ்தர்களுடனும் பயணிகளுடனும் நெடுந்தீவில் கால்பதித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவலித்துறையில் இடம்பெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் பங்குகொண்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நெடுந்தீவு மக்கள் பிரதிநிதியான சீலன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் கால் பதித்த அமைச்சரவர்கள் பாலன் இயேசு பிறந்த தினத்தன்று புதிய இருநூறு ரூபாவினை எமக்கு அன்பளிப்பாக வழங்கினார். இன்றோ எட்டுக்கோடி ரூபா பெறுமதியான கப்பலையே நெடுந்தீவு மக்களுக்கு வழங்கியுள்ளார் எனத்தெரிவித்தார்.

நான் சொல்வதைச் செய்வேன் செய்வதைச் சொல்வேன் என்பதை வலியுறுத்தி உரையாற்றிய அமைச்சரவர்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆயுத வன்முறையினால் சகலராலும் கைவிடப்பட்ட அந்தரித்த நெடுந்தீவு மக்களுடன் தான் ஒன்றித்திருந்ததை நினைவுகூரவும் தவறவில்லை. அத்துடன் கப்பலானது இறங்குதுறைக்கு சிரமமின்றி வந்துசெல்லும் முகமாக மாவலித்துறைப் பகுதியானது ஒன்றரை மாத காலப்பகுதியில் ஆழப்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்ற தகவலையும் அமைச்சரவர்கள் தெரியப்படுத்தினார்.

நிகழ்வின் நிறைவாக தமது நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினாலும் வழங்கப்பட்ட மேற்படி பயணிகள் கப்பலுக்கு மஹிந்ததேவா எனப் பெயர் சூட்ட வேண்டும் என நெடுந்தீவு மக்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கம் தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் சிறிமோகனன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் மரியதாஸ் நிறைவேற்று பொறியியலாளர் சுதாகர் வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் சிவநேசன் யாழ்.மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் தீவக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் பிரேமரட்ண தீவக கடற்படை கொமாண்டர் நிஷாந்த யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பெருந்தொகையான முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’