வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 ஜனவரி, 2011

குடாநாட்டில் பணம் பறிக்கும், சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்துக்கு நெருக்கமான குழு


குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக் கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது.

தமிழ் மக்களுடன் இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம் உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது.
பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இரண்டு தடவைகள் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச். எம்.அஸ்வர் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு ஓர் ஒழுங்கு இருக்கின்றது. பிரேரணையை வாசிக்க வேண்டும். பின்னர் அதனை முன்மொழிய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

பிரேரணையை சமர்ப்பித்து சுமந்திரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில்,

குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கூட்டமைப்பு 4ஆம் திகதி விடயத்தை சபைக்கு கொண்டுவரவிருந்தது. எனினும் மொழிபெயர்ப்பு பிரச்சினையால் மறுநாளே சமர்ப்பிக்க முடிந்தது. பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. அதுவும் பாதுகாப்பு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி.யினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடயம் தொடர்பில் கூட்டமைப்பினர் பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முந்திக்கொண்டார். இரண்டிற்குமே அரசாங்கம் பதிலளிக்கவில்லை. குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களுக்கும் ஒன்றுடன் ஒன்று ஒத்ததன்மை இருக்கின்றது. இறந்தவர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. அதுவும் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைச் செய்ததன் பின்னரே சடலத்தை கிணற்றில் வீசியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி பாதாள உலக கோஷ்டியினரை துடைத்தெறிவதாக காத்திரமான கருத்தொன்றை முன்வைத்தார். பாதாள உலக கோஷ்டியினர் யாழ்ப்பாணத்தில் இல்லை. குடாநாட்டு விடயத்தில் ஜனாதிபதி நீண்டதூரம் சென்றிருக்க வேண்டிய தேவையில்லை. மிக எளிமையாக கண்டிருக்கலாம். குடாநாட்டு மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் பொருட்களை சூறையாடும் குழுசெயற்படுகின்றது. அது அரசாங்கத்துக்கு நெருங்கிய குழுவாகும்.
24 சம்பவங்களில் துப்பாக்கி சூட்டினால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அதில் ஒரு சம்பவத்தை பார்க்கின்றபோது குறிபார்த்து சுடுவதில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவரே செய்துள்ளார். அவருடைய கால் அடையாளம் அவ்வீட்டின் அடுப்படியில் இருக்கின்றது.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை கைதுசெய்யாமல் அரசாங்கம் எதிர்மறையாக பகிரங்கப்படுத்தலை தானாகவே மேற்கொண்டு வருகின்றது.
பாதுகாப்புப் படையினர் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வன்செயல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் விருப்பமின்றி செயற்பட்டு வருகின்றது. இன்றேல் அரசாங்கம் குருட்டு கண்ணைக் காட்டிக்கொண்டு ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றதா?
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. சாட்சியமளித்தவர்களில் பலரும் மேற்படி விடயத்தை முன்வைத்துள்ளனர். ஈ.பி.டி.பி.யும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்துள்ளது. இது அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே செயற்படுகின்றது.
தமிழ்மக்களுடன் இணக்கம் காண வேண்டும். ஜனாதிபதி தமிழில் பேசுவதற்கு முயற்சிக்கின்றனார். இவ்வாறான நிலையில் அரச கூடாரத்தில் இருக்கின்ற குற்றவியல் ???அரசாங்கம் கூறுவதைத் தமிழ் மக்கள் செய்ய வேண்டுமாயின் அரசாங்க கூடாரத்தில் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அகற்றிவிட வேண்டும். 24 சம்பவங்களில் 2, 3 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு 2, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை விநோதமானது.
நாட்டிலுள்ள படையினரில் 10 வீதமான படையினர் வடக்கில் இருக்கின்றனர். அங்கு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு அனுமதியளித்தால் சம்பவங்களுடன் அரசாங்கத்தின் ஒரு குழு செயற்படுகின்றது என்ற சாதாரணமான எமது சந்தேகம் உண்மையாகும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’