வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 ஜனவரி, 2011

அச்சத்தில் உறைந்துள்ள யாழ்ப்பாணம்

கே.சஞ்சயன்
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டி வருகிறது.
ஆனால், இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மை தானா என்று கேள்வியை எழுப்ப வைக்கிறது.

  பயங்கரவாதம் என்கிற போது அரசாங்கம் வெறுமனே புலிகளைத் தான் சுட்டிக் காட்டியது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, பொதுமக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கின்ற அவர்களை பீதியில் உறைய வைக்கின்ற செயல்கள் அனைத்தும் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும்.
அந்தவகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் நான்கு படுகொலைகள் இடம்பெற்றன.
சங்கானையில் ஆலயக்குருக்கள் ஒருவர். பின்னர் உரும்பிராயில் பிரதிக் கல்விப் பணிப்பாளர். அடுத்து சரசாலையில் வாகனத் தரகர். கடைசியாக குடத்தனையில் சூழலியலாளரும் அஞ்சல் திணைக்கள ஊழியருமான ஒருவர்.
மொத்தம் நான்கு பேர் ஒரே மாதத்தில் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டதை சாதாரண விடயமாக யாரும் கருதிவிட முடியாது.
அதுமட்டுமன்றி உரும்பிராயில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவரும் அல்வாயில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் ஒருவரும் வாகனத்தில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
இவை நடந்தது கடந்த வருடத்தின் இறுதி நாட்களில்.
புத்தாண்டு தினத்திலும் கூட உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்தப் பத்தி எழுதப்படும் வரை தெரியாது.
இதைவிட யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த கொள்ளைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கணக்கில் எடுக்கப் போனால் அந்தப் பட்டியல் மிகவும் நீளமானது.
ஆரம்பத்தில் கொள்ளைகளில் தொடங்கிய யாழ்ப்பாணப் பயங்கரச் சூழல் இப்போது படுகொலைகளாகவும்- ஆட்கடத்தல்களாகவும் வடிவெடுத்துள்ளது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்கு படுகொலைகளும் எதேச்சையானதென்றோ அரசியல் உள்நோக்கம் கொண்டவையல்ல என்றோ ஒதுக்கி விட முடியாது.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால்- இவற்றின் பின்னணி குறித்து சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்து 20 மாதங்களாகின்ற நிலையில்- இதுவரை நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தவிர்ந்த இதே பாணியிலான படுகொலைச் சம்பவங்கள் வேறேதும் நிகழவில்லை.
ஆனால் கடந்த டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் திடீரென நிலைமை மோசமடையத் தொடங்கியது.
ஆயுதமுனைக் கொள்ளைகளில் தொடங்கிய அடாவடித்தனங்கள் இப்போது கொலைகள் ஆட்கடத்தல்கள் வரை வந்து நிற்கிறது.
இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று யாழ்ப்பாண மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
பெயரளவுக்கு போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த 2005-06 காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் சர்வசாதாரணம். நாளாந்தம் கொலைகளும் ஆட்கடத்தல்களும் அங்கு  நடந்தேறின.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் வீதிகளில் கிடப்பதும் அதுபற்றிய விசாரணைகள் அப்படியே கிடப்பில் போடப்படுவதும் வழக்கம்.
அவையனைத்துமே புலிகளால் அல்லது பயங்கரவாதிகளால் நிகழத்தப்பட்டவை என்று அரசாங்கம் சொல்லும்.
ஊடகங்களோ அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று செய்தி வெளியிடும். ஆனால் அது ஒரு புலனாய்வுப் போர் அல்லது நிழற்போரின் விளைவு என்பது தான் உண்மை.
இதுபற்றி அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட குறிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை கிட்டத்தட்ட 2008ம் ஆண்டு வரை தொடந்தது.
ஆனால் அதற்குப் பிறகு இராணுவக் கெடுபிடிகள் சுற்றிவளைப்புகள் சோதனைகள் என்று பொதுமக்கள் நெருடிக்களைச் சந்தித்தனரே தவிர அது போன்ற இருண்ட காலத்தை அனுபவிக்கவில்லை.
ஆனால், இப்போது யாழ்ப்பாண மக்கள் அந்த இருண்ட யுகம் திரும்ப வந்து விட்டதோ என்று அஞ்சுகின்றனர்.
இதற்குக் காரணம் இந்தப் படுகொலைகள் தான்.
சங்கானையில் ஆலயக் குருக்களின் படுகொலை கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டது.
அத்துடன் அரசியல் பின்னணி ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டது.
கொள்ளைக்காக அந்தக் கொலை நடந்திருந்தால் பெரியளவில் திருட்டு முயற்சி நடந்திருக்க வேண்டும். அப்படியேதும் நடந்ததாகத் தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தில் படையினரின் ஆயுதங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அத்துடன்  முன்னாள் போராளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து உரும்பிராயில் நடந்த கொலைக்கு அரசியல் பின்னணி இல்லை என்று கூறப்பட்டது. அதேவேளை இந்த விவகாரத்துக்கும் சிங்களத்தில் தேசியகீதம் பாட வேண்டும் என்ற விவகாரத்துக்கும் முடிச்சுப் போடும் வகையிலும் செய்திகள் வெளியாகின. ஆனால் அது தனிப்பட்ட பகையின் விளைவு என்கிறது அரசாங்கம்.
அதேவேளை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இன்னமும் கொலையாளி அல்லது கொலையாளிகள் கண்டறியப்படவில்லை.
அடுத்து, சரசாலை வாகனத் தரகர் படுகொலை தந்திரமாக கடத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. அவர் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய ஒருவர்.
அதேபோன்று தான் குடத்தனையில் கொல்லப்பட்டவரும் வன்னியில் இருந்து மீளக்குடியேறியவரே.
இவர் ஒரு சூழலியலாளர்- குடத்தனையில் நிகழும் மணல் அகழ்வைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரது முகநூலில் இடம்பெற்ற படங்களும் இந்தக் கொலைக்கு காரணமாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது.
அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்தப் படுகொலைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ள செய்தி- யாழ்ப்பாணம் இப்போது மோசமானதொரு நிலையில் இருக்கிறது என்பதே.
யாழ்ப்பாணத்தில் ஆயுதக்கலாசாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. மக்களை அச்சுறுத்தும் ஆயுதக்குழுக்கள் இன்னமும் உயிர்வாழ்கின்றன. பயமும், பீதியும் விலகாத வாழ்வே தொடர்கிறது.
பயங்கரச் சூழலில் இருந்து அங்குள்ள மக்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இவையெல்லாம் இந்தக் கொலைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ள உண்மைகள்.
அரசாங்கம் கூறுவது போன்று யாழ்ப்பாணம் இன்னமும் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடியதொரு இடமாக மாறவில்லை. இந்தக் கருத்து அரசாங்கத்தை சிலவேளைகளில் கோபமடையச் செய்யலாம். ஆனால் உண்மை அது தான்.
யாழ்ப்பாணத்தில் நடந்த ஆயுதமுனைக் கொள்ளைகள், கொலைகளை தடுக்கின்ற அல்லது நிகழ்ந்த கொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்கின்ற நடவடிக்கைகள் உரிய முறைப்படி நடப்பதாக அங்குள்ள மக்கள் நம்பவில்லை.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வது பற்றிப் பேசுகிறது. முதலீட்டாளர்களை அழைத்து வந்து காட்டுகிறது.  ஆனால் அங்குள்ள மக்களோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உலாவர வேண்டியுள்ளது.
இது யாழ்ப்பாணத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு ஒருபோதும் உதவாது. இந்தப் பயங்கரச் சூழல் திடீரென்று தான் எழுந்துள்ளது.
விரைவில் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் இத்தகைய கொலைகள் நடைபெறுவதானது- சுதந்திரமான தேர்தலுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே 2005ம் ஆண்டில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த ஏராளமானோர் அந்தக் காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.
அரசாங்க என்னவோ இந்தக் கொலைகளுக்கு அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படிக் கூறிக் கொண்டிருப்பது மட்டும் பொறுப்பு வாய்ந்த  ஒரு அரசாங்கத்தின் செயலாக இருக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் பொறுப்பு வாய்ந்த ஒரு அரசின் முதன்மையாக செயலாக இருக்கும்.
இந்தக் கொலைகளின் பின்னணியும் இவற்றின் சூத்திரதாரிகளும் கண்டறியப்படுவதற்கும்- அதை வெளிக் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் எந்தளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதைக் கொண்டு தான் தமிழ்மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
இப்போது யாழ்ப்பாண மக்கள் எல்லோர் மீதுமே சந்தேகம் கொள்ளத் தொடங்கி விட்டனர். இது தவிர்க்கப்பட முடியாத விடயமும் கூட.
இந்தக் கட்டத்தில் மக்களின் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளவர்களில் எத்தனை பேர் தம்மை நிரபராதிகள் என்று நிரூபிக்கப் போகின்றனர்? அதை அவர்கள் எப்படிச் செய்யப் போகின்றனர்?  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’