அனைத்து தரப்பினரதும் உண்மைத் தன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே ஊடகங்களின் தொழிற்பாடாகும். இவ்வாறாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய அவசியம் ஊடக அமைப்புக்களுக்கு இல்லை என ஊடக இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்தது
.நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இதிலிருந்து அரசாங்கம் பின்வாங்குமாயின் புதியதொரு ஊடக கலாசாரத்தை நோக்கி அரசாங்கம் பயணிக்கிறது என்றே கொள்ள வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டது.
லங்கா ஈ நியூஸ் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஊடக இயக்கங்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடக இயக்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:-
சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர:-
"ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் ஊடக அடக்குமுறைகளுக்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது. லசந்த படுகொலை, எக்னெலிகொட காணாமல் போனமை, சிரச தாக்குதல் பட்டியலில் தற்போது லங்கா ஈ நியூஸ் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளியிட மறுத்து வருகின்றது. விசாரணைகள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வருகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளதாயின் அது நாட்டின் அசாதாரண நிலைமையாகும்.
இல்லாவிடின் இந்த சம்பவங்களுடன் அரசாங்கத்துக்கு மறைமுகவாகவேனும் தொடர்பு இருக்க வேண்டும். அவ்வாறு தொடர்பு இருக்கும் பட்சத்திலேயே ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க அரசாங்கம் தவறுகின்றது.
வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது தெற்கில் வியாபித்துள்ளன. சுமார் 3 தசாப்த காலங்களாக இடம்பெற்றுவரும் இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்." என்றார்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பதில் தலைவர் ஞானசிறி கொத்திகொட:-
"ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்திவிட்டு அவற்றைக் கண்டிப்பதாகவும் விசாரணைகளை நடத்த பொலிஸாருக்கு உத்தரவிடுவதன் மூலமும் அரசாங்கம் மாபெரும் கண்துடைப்பு நாடகமொன்றை நடத்தி வருவதுடன் இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு ஆசிர்வாதத்தினையும் வழங்கி வருகின்றது.
இணையத்தளங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதாக பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் அண்மையில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதாக உறுதியளித்துள்ளார். அவர் உறுதியளித்து இரு வாரங்கள் ஆன நிலையிலேயே லங்கா ஈ நியூஸ் அலுவலகம் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை அறிய முடிகிறது. இந்த தீ ஊடக நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்துக்கும் வைக்கப்பட்டதாகும். எனவே ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தயங்க கூடாது" என்றார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உப தலைவர் அ.நிக்ஸன்
"நாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் ஆரம்பமான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் மட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்." என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’