வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை தேவைகளான புகலிடம், நீர் மற்றும் சுகாதார சேவைகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் அவசர உதவிகளுக்கான பிரதி இணைப்பாளருமான கதரின் பிறேக் தெரிவித்தார்.
தற்போதைய மனிதாபிமான உதவிகளை கண்காணிப்பதற்காகவே தான் இலங்கை வந்ததாகவும், தனது கண்காணிப்பின் படி அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கும் அவசர மனிதாபிமான உதவிகள் தேவை எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் எந்த பகுதிக்கும் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களின் அவசர தேவைகளுக்காக 51 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளதாக கதரின் கூறினார்.
முதன்மை திட்டங்களுக்காக அவரச மத்திய திட்டத்தின் ஊடாக ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வட மாகாணத்தை மீள கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபையும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களும் இலங்கை அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை தான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்;ஷ ஆகியோரை சந்தித்த போது தெரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா முகவர் நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சி முகவர் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் பிரதி இணைப்பாளர் கதரின் பிறேக் கூறினார்.
அண்மையில் எற்பட்ட வெள்ளத்தினால் இலங்கையில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற அடிப்படையிலும் நேரம் போதாமையின் காரணமாகவுமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரம் தான் விஜயம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது பிரதிநிதிகள் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் உடனுக்குடன் வழங்கி வருவதனாலுமே தான் மக்களை சந்திக்கவில்லை என கதரின் பிறேக் குறிப்பிட்டார்.
எனினும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் தொண்டர் நிறுவன பிரதிநிதிகளுடன் வெள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்காக பிரதி செயலாளரும் அவசர உதவிகளுக்காக பிரதி இணைப்பாளருமான கதரின் பிறேக் வவுனியா முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ததுடன் இலங்கை அரசின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’