வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 ஜனவரி, 2011

கொலை,கொள்ளை குடாநாட்டு விவகாரம் தொடர்பில் நாலரை மணிநேரம் ஒத்திவைப்பு வேளை விவாதம்

யாழ். குடாநாட்டு நிலைவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாலரை மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவிருக்கின்றது.
அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை,கொள்ளை மற்றும் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்படவிருக்கின்றது.
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு கூடும்.
சபையின் பிரதான நடவடிக்கைகள் மற்றும் வாய்மூல விடைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் பிற்பகல் 2 மணியிலிருந்து 6.30 மணிவரை நாலரை மணிநேரம் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.
இதேவேளை குடாநாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கடந்த 04 ஆம் திகதி அமைச்சின் கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.
இதனிடையே எழுந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நிலைவரம் தொடர்பில் நேரடியாக கண்டறிவதற்கு சபாநõயகர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அங்கு அனுப்பிவைக்கவேண்டும் என கோரிநின்றார். எதிர்க்கட்சி தலைவரின் அந்த கோரிக்கையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டது.
இந்நிலையில் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் எம்.பி.யான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் ஜனவரி 05 ஆம் திகதி புதன்கிழமை குடாநாட்டு நிலைவரம் தொடர்பில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
கவனயீர்ப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து பதிலளிக்கவேண்டி இருப்பதனால் அதற்கு உடனடியாகவே பதிலளிப்பதற்கு மறுப்பு தெரிவித்த சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா முழுநாள் விவாதமொன்றை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றைய முழுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.
அத்துடன் நாளைவெள்ளிக்கிழமை முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் (திருத்தச்), மத்தியஸ்த சபைகள் (திருத்தச்) ஆகிய சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதம் நடத்தப்படும். அன்றையதினம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கின்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதமும் நடத்தப்படும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’