வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 ஜனவரி, 2011

இலங்கை இளைஞரை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி பிரித்தானிய எம்.பியிடம் மகஜர்

பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரை நாடு கடத்துவதற்கு எதிராக அவரின் நண்பர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.

26 வயதான சிவராஜா சுகந்தன் எனும் இந்த இளைஞர் 1999 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவரின் மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள அவர் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்குகிறார்.
பிரிட்டனில் இரு பிள்ளைகளைக் கொண்டுள்ள சுகந்தனுக்கு பிணை வழங்குவது தொடர்பான விசாரணை முறையாக நடைபெறவில்லை என ஆவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு முன்வைத்த வாதங்களின் பிரதி சுகந்தனுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு சட்டத்தரணியொருவர் வழங்கப்படவில்லை எனவும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனனர்.
இந்நிலையில் சிவராஜா சுகந்தனின் விடுதலையை வலியுறுத்தி 800 பேர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று பிரிஸ்டல் மேற்கு தொகுதி லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டீபன் வில்லியம் எம்.பி. கூறுகையில் இவ்விடயம் குறித்து ஏற்கெனவே குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மீண்டும் தான் அதை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுகந்தன் பிரிட்டனில் இரு பிள்ளைகளைக் கொண்டிருப்பதும் அவர் குறிப்பிடத்தக்க காலம் அங்கு தங்கியிருப்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’