வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 ஜனவரி, 2011

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: த.தே.கூ

டக்கில் சந்திக்கு சந்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதிலும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே அப்பிரதேசங்களில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு வாழ் மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பிரேரணையினை முன் வைக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில் : யுத்தம் முடிவடைந்து சிவில் நிர்வாகம் வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இப்பிரதேசங்களில் இன்றும் ஏராளமாக பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு எதிராக அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த இரண்டு மாத காலமாக வடக்கில் மிகவும் மோசமான முறையில் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் வடக்கில் ஏதோ ஒரு மூலையில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இதுவரையில் எந்தவொரு குற்றவாளியையும் பொலிசாரோ இராணுவத்தினரோ கைது செய்து செய்யவில்லை . ஒரு கொலை சம்பவத்தில் மாத்திரம் இருவரை சந்கேத்தில் பேரில் கைது செய்துள்ளதாக அறிய வந்துள்ளது.
ஏனைய பாரிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மானிப்பாய் பிரதேசத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்னை கத்தியால் குத்திவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதற்கு முன்னர் வடமராட்சி பகுதியில் 48 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயொருவர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார். இதேபோன்று இன்னோரன்ன கடத்தல், கொலை மற்றும் கொள்ளை என பல்வேறு சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
ஆனால் படைத்தரப்பினரோ அரசாங்கத் தரப்பினரோ மேற்படி சம்பவங்களை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் வடக்கில் ஒவ்வொரு சந்தியிலும் இராணுவ முகாம்களும் பொலிஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாரிய பாதுகாப்பு நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறானதெõரு சூழலிலும் கடத்தல் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றால் வேடிக்கையாக இருப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றன.
எனவே அரசாங்கம் உடனடியாக வடக்கில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும். இதனை கட்டுப்படுத்த இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் இன்று பெரும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் கோரவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’