வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு: 5 ஊடக அமைப்புகள்

டகங்கள் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் போவதனால் அண்மைக்காலத்தில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென ஐந்து ஊடக அமைப்புக்களும் இன்று குற்றஞ்சாட்டின.


ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதுள்ள அரசாங்கத்தின் இயலாமையைக் கண்டித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே 5 ஊடக அமைப்புக்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தன.
அரசாங்கம் அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஊடகங்கள் மீது குற்றம் இழைப்போருக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருந்தால் மாத்திரமே குற்றவாளிகள் தண்டிக்கப்படாது போவார்களென ஊடக நிறுவனங்கள் தெரிவித்தன.
இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உபதலைவர் அ.நிக்ஸன்,
'கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை துரிதப்படுத்தாதுள்ள அதேவேளை, காணாமல் போன ஊடகவியலாளர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு இரு வருடங்களாகியுள்ளன. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் காணாமல் போய் ஒரு வருடம் கடந்துள்ளன. சிரச ஊடக நிறுவனம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எதனையும் முன்னெடுக்கவில்லை.
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக ஊடக அமைப்புகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரையில் போராட்டம் தொடரும்' என்றார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தொழில்சார் ஊடக ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகிய ஐந்து அமைப்புக்களும் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனநாயக முன்னணித் தலைவர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’