எமது மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பேதங்களை மறந்து யாவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருப்பதானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்வாறு பேதங்களை மறந்து எமது மக்களின் வளமான எதிர்காலத்திற்காக யாவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அவ்வாறு ஒன்றிணைந்து உழைப்பதே காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது. கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிப்படைந்த மக்கள் தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்றும் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் செயலக கோட்போர் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் கடந்த காலங்களில் ஏற்பட்ட அவலங்களைப் போன்று எதிர்காலச் சந்ததியினருக்கும் ஏற்படாது பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான பகுதியாகத் திகழும் என்றும் இன்று வழங்கப்படுகின்ற பொருட்கள் 45 மில்லியன் ரூபா பெறுமதியானவை என்பதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு உதவும் திட்டம் என்றும் nதிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் இச்செயற்திட்டத்தை முன்னெடுக்க உதவிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த கால யுத்தத்தினால் மக்களாகிய நீங்கள் உயிர் உடமைகளை இழந்துள்ள நிலையில் இவ்வாறான அவலத்திற்கு ஜனாதிபதி அவர்கள் நல்ல தீர்வை இன்று எமக்கு தந்துள்ளார்.
எனவே உங்களது மனக் கஸ்டங்கள் துன்பங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்கு அறிவார் என்ற வகையில் இனிவரும் காலங்களில் மக்கள் பணி செய்யக் காத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறான அரசாங்கம் மேற்கொள்ளும் நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அரசாங்கம் நல்ல நிகழ்வுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா அ.விநாயகமூர்த்தி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
இறுதியில் பயனாளிகளுக்கான பொதிகளை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா குணரட்ன வீரக்கோன் பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’