வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இலங்கை – பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்: கமெரூனின் கடிதத்தை வெளியிட இலங்கை மறுப்பு

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த தனிப்பட்ட விஜயமொன்று ஏனைய பிரித்தானிய அமைச்சர்களினதும் புலம் பெயர்ந்த தமிழர்களினதும் அழுத்தங்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் மேற்படி விடயமும் தெரியவந்துள்ளது என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெயியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி செயலகத்தில் இத்தகைய கடிதங்களை கையாளும் கொள்கை அமுலாக்கல் மற்றும் தகவல் பிரிவு, பிரித்தானிய பிரதமரிடமிருந்து இத்தகைய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது. இது குறித்து வெளிவிவகார அமைச்சுடன் கேட்குமாறும் பிரித்தானிய மகாராணியாரிடமிருந்து கிடைத்த கடிதம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் பந்துல ஜயசேகர இது குறித்து உபசரணை பிரிவுத் தலைவர் ஏ.எல். ரட்னபாலவிடம் கேட்குமாறு தெரிவித்தார். பிரித்தானிய பிரதமரிடமிருந்து கடிதமொன்று கிடைத்ததை ரட்னபால உறுதிப்படுத்தினார். ஆனால் அதை வெளியிடுவதற்கான அதிகாரம் தனக்கு இல்லையெனவும் பந்துல ஜயசேகரவுடன் தொடர்புகொள்ளுமாறும் கூறினார். அதன்பின் தனக்கு அத்தகைய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என ஜயசேகர தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் கெமரூனின் கடிதத்தில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்திற்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கையில் நல்லாட்சி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாக ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதியின் விஜயத்தின்பின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை இரத்துச் செய்யப்பட்ட நிலையில் இக்கடிதம் இரகசியம் வெளிவந்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், கதிர்காமர் ஞாபகார்த்த சொற்பொழிவாற்றுவதற்காக கொழும்புக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான உடையப்படக்கூடிய நிலையிலுள்ள உறவை மேலும் சீர்கெடச் செய்துள்ளது.
கலாநிதி பொக்ஸின் விஜயம் தனிப்பட்டதென கூறப்பட்டாலும் அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற்றிருந்தார் என சண்டே டைம்ஸுக்கு தெரியவருகிறது. இவர் சர்வதேச பாதுகாப்பு குறித்து உரையாற்றவிருந்தார்.
வெளிவிவகார அமைச்சின் கரிசனைகள் காரணமாகவே அவர் தனது விஜயத்தை இரத்துச் செய்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
எனினும் கலாநிதி பொக்ஸ் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனவும் அது உத்தியோகபூர்வ விஜயமாக தரமுயர்த்தப்படும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து வியாழனன்று நள்ளிரவு கதிர்காமர் மன்றத்தின் அறிவிக்கப்பட்டது. இத்தகவலை லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அன்று மாலை கலாநிதி பொக்ஸின் அலுவலகம் அறிவித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் செய்தபோது அவர் சந்தித்த ஒரேயொரு பிரித்தானிய அரசியல் தலைவர் கலாநிதி லியாம் பொக்ஸ் ஆவார். அவர் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை சந்தித்தார். பிரித்தானிய அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்கள் சந்திப்புகளுக்கான நேரம் ஒதுக்க மறுத்தனர்.
இவ்வார ஆரம்பத்தில் பதவிக்காலம் முடிந்துச் செல்லும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்புவரை அவருடனான பிரியாவிடைச் சந்திப்புக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ மறுத்தார். பின்னர் பீற்றர் ஹேய்ஸ் இலங்கையிலிருந்து புறப்படும் தினத்தில் காலை உணவுவிருந்துக்கு அவரை ஜனாதிபதி அழைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் உள்ளுர் தேர்தல் விடயத்தில் தலையிட்டதன் காரணமாக 'வரவேற்கப்படாதவராக' அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மிக மோசமான நிலைமையாக தற்போதைய நிலையை ராஜதந்திர வட்டாரங்கள் நோக்குகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’