வடக்கு கிழக்கு மக்களின் மேம்பாட்டிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடாமுயற்சியுடனும் தொடர்ச்சியாகவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தேசிய பாதுகாப்புத் தினம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு மட்டுமன்றி முழு இலங்கையையும் அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் உயர்ந்த நோக்கமாகும்.
அவ்வாறான அவரது நோக்கத்தின் அடிப்படையிலேயே இலங்கையை ஆசியாவின் அதிசயமிக்க நாடாக மாற்ற முடியும்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக இலங்கையில் 5 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதுடன் 171 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டதுடன் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 27 ஆயிரம் பேர் தமது தொழிலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் முதற்கொண்டு வாழ்வாதாரத் திட்டங்கள் வரையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த காலப் போரினால் அழிவடைந்துள்ள வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் மீள்கட்டுமானம் விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை அரசு அக்கறையுடன் செயற்படுத்தி வருகின்றது.
அதன் பிரகாரம் இலங்கை முழுவதிலும் வாழுகின்ற மக்களுக்காகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும், விடா முயற்சியுடனும் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
மகிந்த சிந்தனை மூலம் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் வெற்றியடைந்து ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதியின் எண்ணத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சிங்கள மொழியில் உரையாற்றிய பிரதமர் அவர்கள் அங்கு தமிழ் மொழியிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் தி.மு. ஜயரட்ன அவர்கள் அடங்கிய குழுவினரை துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி யாழ் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறப்பிடத்தில் அதிதிகள் நின்றிருக்க தரைப் படை கடற்படை விமானப்படை மற்றும் பொலிஸாரின் என்பவற்றின் அணிவகுப்புகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் கலை கலாசார விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு அணிவகுப்புகளும் தொடர்ந்து குடாநாட்டின் பிரபல பாடசாலைகளின் மாணவ மாணவிகளின் அணிவகுப்புகளும் சாரணிய மாணவர்களின் அணிவகுப்புக்களும் இடம்பெற்றன.
அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஜயரட்ன அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மகிந்த அமரவீர ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அணிவகுப்புகளை அடுத்து மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைசார்ந்த நிர்வாகங்களின் செயற்பாடுகளை எடுத்தியம்பும் வகையில் பதாதைகளைத் தாங்கிய வாகனங்கள் வலம் வந்தன.
அதிதிகள் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு அங்கு மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வமதத் தலைவர்கள் ஆசியுரைகளை வழங்கினர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் தேசிய பாதுகாப்பு என்பது இந்த தேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டதாகும் எனத் தெரிவித்தார்.
இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர உரையாற்றுகையில் போர்க்காலங்களின் போதும் உயிரிழந்த மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புத் தினம் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்புத்தின நிகழ்வை முன்னிட்டு நூலொன்றும் வெளியிடப்பட்டது.
அத்துடன் இடர்முகாமைத்துவம் தொடர்பில் ஊடகத்துறையில் பங்களிப்பாற்றிய ஊடகவியலாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டதுடன் தேசிய பாதுகாப்பு தினத்தை ஒழுங்கமைப்புச் செய்தவர்களான யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அரச அதிபர் இமெல்டா சுகுமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரக்கோன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாவட்ட மட்டத்தில் பாடசாலைகள் ரீதியாக நடத்தப்பட்ட பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பிரதமர் ஜயரட்ன பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்க தொடர்ந்து ஏனைய விருந்தினர்களும் சான்றிதழ்களை வழங்கினர்.
தேசிய பாதுகாப்பு தினத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அனர்த்த முகாமைத்து நிலையம் மாவட்ட செயலாளர் காரியாலயம் என்பன இணைந்து இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்தன.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் டுலிப் விஜேசேகர வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி சுற்றுச் சூழல் இயற்கை வள பிரதி அமைச்சர் அப்த்துல் காதர் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் குணசேகர ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார். சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் மற்றும் ஏ.எச்.எம். அஸ்வர் பிரதேச செயலர்கள் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் கல்விமான்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’