பிரித்தானியாவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்தவர்களில் ஒருசிலராலும் சில சிங்கள அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், அரசியல் நிலைவரங்களை அறிந்து செயற்படுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் தாக்கத்தையும் அவர்களது இன்றைய மனநிலையையும் எம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆனால் யுத்தத்திற்குப் பின்பான காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்படைவது இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களுமேயாகும்.
இதனையுணர்ந்து இப்படியான செயற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்துவது ஆரோக்கியமானதாகும். யுத்தததிற்கு முன் தமிழர்களை சிங்கள மக்கள் சந்தேக கண்ணோட்டத்தல் தான் நோக்கினார்கள்.
அனைத்து தமிழர்களையும் புலிகளாகவே நோக்கினார்கள். இதனால் வடக்கு கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
இதனை இலங்கை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அனைவரும் அனுபவித்துள்ளோம்.
இன்று யுத்தம் நிறைவுற்று விடுதலைப் புலிகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளார்கள்.
இன்றைய காலகட்டத்தில் யுத்ததிற்கு பின்பான கடந்த ஒருவருட காலத்தில் தமிழ் மக்களை சகோதர மனப்பான்மையுடன் சிங்கள மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இரு இனங்களுக்கு இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகின்றது.
இலங்கையர்கள் நாங்கள் என்ற நிலைப்பாட்டில் அபிவிருத்தியை நோக்கி நாம் அனைவரும் கைகோர்த்துச் செல்ல தேவையேற்றுள்ள இந்தத் தருணத்தில் புலம்பெயர்ந்த ஒரு சிலரது இந்தச் செயற்பாட்டினால் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இது ஏற்படுத்துகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள் இது. தயவு செய்து எம்மை இன்றைய அரசியல் நிலவரங்களை அறிந்து செயற்படுங்கள். உண்மையிலேயே இது இலங்கை மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டியெழுப்ப வேண்டும். அங்கு வீடுகள் இன்றி வசிப்போருக்கு வீடுகள் கட்டித்தர முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி அப்பகுதிகளில் தமது முதலீடுகளைச் செய்து பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
எமது பிரச்சினையை எமது ஜனாதிபதி மூலமாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் எமக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. எவ்விதமான தீர்வோ அபிவிருத்தியோ எமது ஜனாதிபதி அவர்களுடன் பேசியே தீர்க்க வேண்டும் என்பதை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இதனைப் புலம்பெயர்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’